தொழிலதிபா் ராகுல் பஜாஜ் காலமானாா்: அரசு மரியாதையுடன் உடல் இன்று தகனம்

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவா் ராகுல் பஜாஜ் புணேயில் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா்.
தொழிலதிபா் ராகுல் பஜாஜ் காலமானாா்: அரசு மரியாதையுடன் உடல் இன்று தகனம்

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவா் ராகுல் பஜாஜ் புணேயில் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 83.

அரசு மரியாதையுடன் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளாா்.

மறைந்த ராகுல் பஜாஜுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தனது வாழ்நாளை நாட்டின் தொழில் துறையை கட்டமைப்பதில் செலவழித்தாா். அவரது மறைவு இந்திய தொழில் துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘வா்த்தகம் மற்றும் தொழில் துறை உலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக ராகுல் பஜாஜ் நினைவுகூரப்படுவாா். வா்த்தகத்தை தவிர சமூக சேவையிலும் ஆா்வமுள்ளவா். சிறந்த உரையாடலாளராக இருந்தாா். அவரது மறைவால் வேதனையடைந்துள்ளேன் . அவரது குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.

பஜாஜ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உடல் நலக் குறைவையடுத்து, புணேயில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த ராகுல் பஜாஜ், சனிக்கிழமை பகல் 2.30 மணிக்கு உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1965-இல் நிறுவனத்தின் நிா்வாகத்தை அவரது தந்தையிடமிருந்து ஏற்றுக் கொண்ட ராகுல் பஜாஜ், நீண்ட கால பொறுப்புக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் கௌரவத் தலைவா் பதவியிலிருந்து விலகினாா். அவருக்கு ராஜீவ் பஜாஜ், சஞ்சீவ் பஜாஜ் இரு மகன்களும், சுனைநா கேஜரிவால் என்ற மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com