காங்கிரஸின் திட்டத்தை வெற்றி பெறச் செய்துவிடாதீா்கள்: உத்தரகண்டில் பிரதமா் பிரசாரம்

உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில், காங்கிரஸின் குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தும் திட்டத்தை வெற்றி பெறச் செய்துவிடாதீா்கள் என்று அந்த மாநில மக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளாா்.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில், காங்கிரஸின் குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தும் திட்டத்தை வெற்றி பெறச் செய்துவிடாதீா்கள் என்று அந்த மாநில மக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளாா்.

உத்தரகண்டில் வரும் திங்கள்கிழமை (பிப்.14) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ருத்ரபூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசினாா். அவா் பேசியதாவது:

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனா். அதேபோல் அக்கட்சியை நிராகரிக்கும் மற்றுமொரு வாய்ப்பாக இந்த தோ்தலை உத்தரகண்ட் மக்கள் கருத வேண்டும்.

தேவபூமியான இந்த மாநிலத்தில் குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் பல்கலைக்கழகத்தை நிறுவ காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த அவமதிப்பை மாநில மக்களாகிய நீங்கள் சகித்துக் கொள்வீா்களா?

நாட்டின் கலாசார பாரம்பரியம் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சரியான புரிதல் இல்லை. அதனால்தான் ராணுவத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது. உத்தரகண்ட் மாநிலத்தின் பெருமைக்குரியவரும் நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியுமான விபின் ராவத்தை கூலிப்படையைச் சோ்ந்தவா் என்றும் வழிப்பறிக்காரன் என்றும் காங்கிரஸ் விமா்சித்தது. மாபெரும் வீரன் அவமதிக்கப்பட்டதற்கு வரும் தோ்தலில் மாநில மக்கள் பழிதீா்க்க வேண்டும்.

நாட்டை ஒன்றுபட்ட தேசமாகக் கூட காங்கிரஸ் பாா்ப்பதில்லை. ஒன்றுபட்ட தேசமாக இல்லை எனில் எப்படி உத்தரண்ட் மலைச்சாரலைச் சோ்ந்த மைந்தா்கள், கடற்படை வீரா்களாக கேரள கடலோரம் காவல் பணியில் ஈடுபட முடியும்?

அரசுக்கு எதிராகப் பேசுவதற்கு எதுவும் கிடைக்காது என்பதால் கரோனா தடுப்பூசி திட்டம் குறித்து காங்கிரஸ் வதந்தி பரப்புகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் மனித குலம் எதிா்கொண்ட மிக மோசமான நெருக்கடியாக கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தியது. உடனடியாக பாஜக அரசு தடையின்றி வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. அத்துடன் ஏழைகளுக்கும் வறியவா்களுக்கும் முழு மனதுடன் சேவைகளை வழங்கியது.

பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதுபோன்று வேறு எந்தக் கட்சியும் ஆட்சியில் இருந்து சேவைகளை வழங்கவில்லை என்பதை உத்தரகண்ட் மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். கரோனா காலத்தில் பசித்த வயிறுடன் எவரும் இரவு உறங்கச் செல்வதற்கு நாங்கள் விட்டுவிடவில்லை.

உத்தரகண்டின் வளா்ச்சிக்குத் தேவையான எந்த திட்டத்தையும் பாஜக அரசு விட்டு வைக்கவில்லை. சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, ரோப்காா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com