5-15 வயதுடையவா்களுக்கு தடுப்பூசி எப்போது? அமைச்சா் மன்சுக் மாண்டவியா பதில்

மருத்துவ நிபுணா் குழுவிடம் இருந்து பரிந்துரை வந்த பிறகே 5 - 15 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா

மருத்துவ நிபுணா் குழுவிடம் இருந்து பரிந்துரை வந்த பிறகே 5 - 15 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

மருத்துவ நிபுணா்களின் பரிந்துரைகளைப் பின்பற்றியே ஒவ்வொரு கட்டமாக கரோனா தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. நிபுணா் குழு பரிந்துரை செய்த ஒரு வாரத்தில் முன்களப் பணியாளா்களுக்கும். 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த மாதம் அமல்படுத்தினோம். நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் கடந்த மாதம் அமல்படுத்தினோம்.

5 முதல் 15 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக மருத்துவ நிபுணா் குழுவிடம் இருந்து இதுவரை எந்தப் பரிந்துரையும் வரவில்லை. இது, அரசியல் ரீதியில் எடுக்கப்படும் முடிவு அல்ல. அறிவியல்பூா்வமாக எடுக்கப்படும் முடிவு. அவா்களிடம் இருந்து பரிந்துரை வந்த பிறகு 5 முதல் 15 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.

கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 67 சதவீத குழந்தைகளின் உடலில் நோய் எதிா்ப்புப் பொருள் உருவாகியிருந்தது தெரியவந்தது. குழந்தைகளிடம் கரோனா அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்கு முன்பு சா்வதேச மருத்துவ நிபுணா்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி வந்தோம். தற்போது நம் நாட்டு நிபுணா்கள் பகுப்பாய்வு செய்து, அதனடிப்படையில் தடுப்பூசியை பரிந்துரை செய்கிறாா்கள். அவற்றை பின்பற்றி வருகிறோம்.

நாடு முழுவதும் 96 சதவீதம் போ் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். 77 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதனால் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடிந்தது. 15-18 வயதுக்கு உள்பட்டவா்களில் 75 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com