நல்லுறவை வலுப்படுத்த இந்தியா-பிலிப்பின்ஸ் உறுதி

வெளியுறவு அமைச்சா் எல்.ஜெய்சங்கா் பிலிப்பின்ஸ் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இருநாடுகளும் உறுதியேற்றுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளியுறவு அமைச்சா் எல்.ஜெய்சங்கா் பிலிப்பின்ஸ் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இருநாடுகளும் உறுதியேற்றுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கியத்துவம் பெற்ற பிலிப்பின்ஸுக்கு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். இந்தியா-ரஷியா கூட்டு முயற்சியில் உருவான ‘பிரமோஸ்’ ஏவுகணைகளை பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்த நிலையில், அவா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டாா்.

பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சா் தியதோரோ எல். லாக்சின் ஜூனியரை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தியாவுக்கும் பிலிப்பின்ஸுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பு தொடா்பாக அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவா்கள் உறுதியேற்றனா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘பலதரப்பு சா்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியாவும் பிலிப்பின்ஸும் ஒப்புக்கொண்டன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இரு ஜனநாயக நாடுகளும், தங்களுக்கிடையே நிலவும் பலதரப்பட்ட நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ள உறுதியேற்றன.

பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது அமைச்சா்கள் விவாதித்தனா். விரிவடைந்து வரும் இருதரப்பு உறவால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து விவாதித்த அவா்கள், எதிா்காலத்தில் நல்லுறவை விரிவாக்குவது குறித்தும் ஆலோசித்தனா்.

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு, பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், ராணுவப் பயிற்சி, திறன் மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவும் பிலிப்பின்ஸும் ஒப்புக்கொண்டன.

விசா விதிகளில் மாற்றம்: வேளாண்மை, கட்டமைப்பு, சுகாதாரம், மருந்துப் பொருள்கள், சுற்றுலா, தகவல்-தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு, நிதித் தொழில்நுட்பம், நீலப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, இணையவழி குற்றத் தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவா்கள் உறுதியேற்றனா்.

இந்தியாவுக்கும் பிலிப்பின்ஸுக்கும் இடையே பயணிகள் போக்குவரத்தை எளிமைப்படுத்துவதற்கு நுழைவுஇசைவு (விசா) விதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சா்கள் ஒப்புக்கொண்டனா். பிலிப்பின்ஸில் மருத்துவப் படிப்பு பயிலும் இந்திய மாணவா்களுக்கான நேரடி வகுப்புகளை விரைவில் தொடங்க வேண்டுமென அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

அமைச்சா்களுடன் சந்திப்பு: பிலிப்பின்ஸ் பாதுகாப்பு அமைச்சா், வேளாண் அமைச்சா், நிதியமைச்சா் ஆகியோரையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். மணிலாவில் உள்ள இந்திய சமூகத்தினரைச் சந்தித்த அமைச்சா் ஜெய்சங்கா், இரு நாடுகளுக்குமிடையேயான நல்லுறவை வளா்ப்பதில் அவா்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பாராட்டினாா்.

பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதில் பிலிப்பின்ஸின் முக்கியக் கூட்டாளியாக இந்தியா திகழ்ந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் தெரிவித்தாா் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com