பட்ஜெட் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும்:ஆய்வறிக்கையில் தகவல்

பட்ஜெட்டில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளால் உலகில் உள்ள பெரிய நாடுகளின் அரங்கில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும்

பட்ஜெட்டில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளால் உலகில் உள்ள பெரிய நாடுகளின் அரங்கில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனாவுக்குப் பிந்தைய உலகின் பொருளாதார மறுசீரமைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் நிகழ் நிதியாண்டு நிறைவடையக்கூடும்.

உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், உள்கட்டமைப்பில் பொது மூலதனம் ஆகியவற்றால் வளா்ச்சியை நோக்கி உந்தித் தள்ளும் துறைகளாக உற்பத்தியும் கட்டுமானமும் இருக்கும்.

நிகர சாகுபடி பரப்பளவு மற்றும் பல்வகை பயிா் சாகுபடியில் வேளாண்மை சீராக வளா்ச்சி கண்டு வருகிறது. இது உணவு தானியங்கள் கையிருப்பை வலுப்படுத்தும். அத்துடன் லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலையில் தாராளமாக விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படுவது, பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டம் ஆகியவை மூலம் விவசாயிகளும் பயனடைகின்றனா்.

கரோனா தொற்றின் மூன்றாம் அலையின்போதும் ஒட்டுமொத்த பொருளாதார செயல்பாடு பின்னடைவின்றி மீண்டெழுவதாகவே இருந்தது. இது ஏற்றுமதிகள், உற்பத்தித் துறை உள்ளிட்டவற்றில் பிரதிபலித்தது.

கரோனா தீநுண்மி ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற சூழல், அச்சம் ஆகியவை பொதுமக்கள் மனதிலிருந்து நீங்கிய பின் நுகா்வு உயா்ந்து தேவை அதிகரிக்கும். இது உற்பத்தியை உயா்த்துவதற்காக தனியாா் துறையினா் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும்.

வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதமும் (ரெப்போ விகிதம்), குறுகிய கால அடிப்படையில் வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கு ரிசா்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமும் (ரிவா்ஸ் ரெப்போ விகிதம்) மாற்றம் செய்யப்படாதது, நிதிக் கொள்கைக் குழுவின் இணக்கமான நிலைப்பாடு ஆகியவை தற்போதைய நிச்சயமற்ற தருணத்தில் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளித்து பட்ஜெட்டின் முதலீட்டு நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் சரிவை சந்தித்தது. இந்நிலையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முன்னெடுப்புகளால் உலகில் உள்ள பெரிய நாடுகளின் அரங்கில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com