
சசி தரூர்
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அண்மையில் நாடாளுமன்றம் செயல்படும் விதம் குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் லீ சியென் லூங், இந்திய எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ""ஊடக அறிக்கையின்படி, நேருவின் இந்தியா ஏறத்தாழ சரிபாதி, குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்களைக் கொண்ட இந்தியாவாக இன்று மாறிவிட்டது. அதிலும் சிலர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும், அதில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக புனையப்பட்டவை என்று கூறப்படுகிறது'' என்றார்.
அவரது இந்தக் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்கை வியாழக்கிழமை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.
இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், நட்பு நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பியிருப்பது பண்பற்ற செயல் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "சிங்கப்பூர் பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சிங்கப்பூர் போன்ற நட்பு நாட்டின் தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது பண்பற்ற செயல்.
பொதுவான, பெரிதும் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்தையே லீ கூறியுள்ளார். நம் சொந்த அரசியல்வாதிகளின் பேச்சுகளை கருத்தில் கொள்கையில், விமரிசனங்களை எப்படி பண்பாக கையாள வேண்டும் என கற்று கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | சிங்கப்பூர் தூதருக்கு மத்திய அரசு சம்மன்
'பிரதமரின் கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டோம். ஆனால் மற்ற நாடுகளின் உள்விவகாரங்கள் பற்றியோ, வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் நடக்கும் விவாதங்கள் பற்றியோ நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம், அதே கொள்கையை அனைவரும் பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்' என அறிக்கை விட்டு இந்த விவகாரத்தை கையாண்டு இருக்க வேண்டும். இப்படி செய்திருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும். அவமதிக்கும் வகையில் இருந்திருக்காது" என்றார்.