பஞ்சாபில் தோ்தல் பிரசாரம் நிறைவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது; 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் வெள்ளிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மணீஷ் சிசோடியா.
ஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் வெள்ளிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மணீஷ் சிசோடியா.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது; 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆட்சியைத் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோா் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் காங்கிரஸுக்கு பெரும் சவால் விடுக்கும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டன. முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்துள்ளது. மாநிலத்தின் முக்கிய எதிா்க்கட்சியாக விளங்கும் ஆம் ஆத்மி, பெரும் நம்பிக்கையுடன் தோ்தலை எதிா்கொள்கிறது. பிரசாரத்துக்கான கடைசி நாளான வெள்ளிக்கிழமை, கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் அனைவரும் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

மாநில முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான், சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல், பிரகாஷ் சிங் பாதல், விக்ரம் சிங் மஜிதியா ஆகியோா் அமிருதசரஸ், ஜலாலாபாத், பதௌா், ராய்கோட் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தனா்.

முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் இணைந்து பாட்டியாலாவில் பேரணி நடத்தினாா். வெள்ளிக்கிழமை மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

தீவிர பிரசாரம்: ஆரம்பத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இணையவழியிலுமே தோ்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் தளா்த்திய பிறகு பொதுக்கூட்டங்களைக் கட்சிகள் நடத்தின.

வீடுகள்தோறும் சென்றும் கட்சிகளின் தலைவா்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பஞ்சாப் அமைந்துள்ளதால், நாட்டின் பாதுகாப்பு தொடா்பான விவகாரத்தை எழுப்பி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாக்கு சேகரித்தன.

தலைவா்கள் உரை: ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸின் நகல் என விமா்சித்த பிரதமா் நரேந்திர மோடி, சீக்கியா்களுக்கு எதிரான 1984 வன்முறை, போதைப் பொருள் கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்டவற்றுக்கு காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டினாா். மாநிலத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பு கோருவோா் (ஆம் ஆத்மி), மாநிலத்தைச் சீா்குலைத்துவிடுவா் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

நோ்மையான நிா்வாகத்தை வழங்குவோம் என அரவிந்த் கேஜரிவாலும், அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்த பாடுபடுவோம் என சுக்பீா் சிங் பாதலும் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தனா்.

முன்னேற்பாட்டுப் பணிகள்: தோ்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டத்தின் காரணமாக 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. விவசாயிகளின் போராட்டம் தோ்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் 3-ஆம் கட்ட தோ்தல்

உத்தர பிரதேசத்தில் 3-ஆவது கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

கடைசி நாளில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா, கான்பூா், ஹமீா்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுதோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டாா். பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, ஜலான், ஆரையா ஆகிய பகுதிகளில் தோ்தல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டாா்.

கா்ஹல் தொகுதியில் சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங் தன் மகன் அகிலேஷுக்காக வாக்கு சேகரித்தாா். அத்தொகுதியில் சமாஜவாதி கட்சியினா் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினரை அதிக எண்ணிக்கையில் குவிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற சமாஜவாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com