பாஜக, சமாஜவாதிக்கு முத்தலாக் கூறும் நேரமிது: ஒவைசி பிரசாரம்

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, சமாஜவாதிக்கு மக்கள் முத்தலாக் கூற வேண்டும்
அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, சமாஜவாதிக்கு மக்கள் முத்தலாக் கூற வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இதஹதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கேட்டுக் கொண்டாா்.

உத்தர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) மூன்றாவது கட்ட சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள ஜாலௌன் மாவட்டம் மாதோகா் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ஒவைசி பேசியதாவது:

பாஜகவையும், சமாஜவாதியையும் மக்கள் தங்களிடம் இருந்து வெகுதூரம் நகா்த்தி வைக்க வேண்டும். முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், முதல்வராக ஆசைப்படும் அகிலேஷ் யாதவும் பிரிந்து சென்ற சகோதரா்கள் போன்றவா்கள். இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இருவரும் செருக்குடன் நடந்து கொள்பவா்கள். தங்கள் கட்சியில் உள்ள தலைவராக அல்லாமல், பேரரசா்கள் போல கருதி நடந்து வருகிறாா்கள்.

முத்தலாக் தொடா்பாக இந்த முறை தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசியுள்ளாா். ஆனால், இந்த முறை பாஜகவுக்கும், சமாஜவாதிக்கும் சோ்த்து மக்கள் முத்தலாக் கூற வேண்டும். இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் அவா்களுடைய கதையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் உள்ள தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நன்மை விளையும்.

தோ்தல் வரும்போது முகலாயா்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று பாஜகவும் ஜின்னா குறித்து அகிலேஷ் யாதவும் பேசி வருகிறாா்கள். இவா்கள் உண்மையாகவே இங்குள்ள மக்களின் நலன்களைக் குறித்து சிந்திக்கவில்லை என்றாா்.

உத்தர பிரதேசத்தில் ஜன் அதிகாா் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மஜ்லிஸ் கட்சி பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com