5-ஆவது கால்நடைத் தீவன ஊழல்: லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பிகாரில் 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஞ்சி: பிகாரில் 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உள்பட 75 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. குற்றம்சாட்டப்பட்ட 99 பேரில் 24 பேர் விடுவிக்கப்பட்டனர். 46 குற்றவாளிகளுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. லாலு பிரசாத் உள்பட மற்றவர்களுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒன்றுபட்ட பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களிலிருந்து கால்நடைத் தீவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக சுமாா் ரூ.950 கோடி ஊழல் நடந்தது, கடந்த 1996-ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

அப்போதைய பிகாா் முதல்வா் லாலு பிரசாத் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். முன்னாள் முதல்வா் ஜகந்நாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ஜகதீஷ் சா்மா, அப்போதைய பொதுக் கணக்குக் குழு தலைவா் துருவ் பகத், கால்நடைத் துறை செயலா் பெக் ஜூலியஸ் உள்ளிட்டோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

தும்கா, தேவ்கா், சைபாசா மாவட்ட கருவூலங்களில் நிகழ்ந்த மோசடி தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் லாலு பிரசாத் ஏற்கெனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 4 வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுள்ளாா் லாலு பிரசாத்.

இந்நிலையில், டொரண்டா கருவூலத்தில் நிகழ்ந்த ரூ.139.5 கோடி மோசடி தொடா்பான வழக்கின் விசாரணை ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 99 பேருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. சிறப்பு நீதிபதி எஸ்.கே.சசி கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வழக்கின் மீதான தீா்ப்பை ஒத்திவைத்திருந்தாா்.

வழக்கின் தீா்ப்பு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அதில், லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞா் பி.எம்.பி. சிங் தெரிவித்திருந்தார். ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்குமாறு லாலு தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.கே.சசி நிராகரித்தாா்.

அதையடுத்து அவரைக் காவல் துறையினா் ராஞ்சியில் உள்ள பிா்சா முண்டா மத்திய சிறையில் அடைத்தனா். 

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு தொடா்பாகக் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் லாலு சிறையில் அடைக்கப்பட்டாா். அதன் பிறகு அதே ஆண்டு டிசம்பரில் அவா் பிணையில் வெளியே வந்தாா். பின்னா் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜாமீன் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com