உள்ளாட்சித் தேர்தல்: என்ன ஆனது நட்சத்திரங்களுக்கு? வலுக்கும் விவாதம்
உள்ளாட்சித் தேர்தல்: என்ன ஆனது நட்சத்திரங்களுக்கு? வலுக்கும் விவாதம்

உள்ளாட்சித் தேர்தல்: என்ன ஆனது நட்சத்திரங்களுக்கு? வலுக்கும் விவாதம்

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாலும், சென்னையில் பதிவானதோ வெறும் 43 சதவீதம்தான்.


சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாலும், சென்னையில் பதிவானதோ வெறும் 43 சதவீதம்தான்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான தேர்தலில் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் 5,794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு காலையில் இருந்தே பரவலாக மந்தமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல மக்கள் வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி வெறும் 23 சதவீத வாக்குகளே பதிவாகின. மாலையில் சற்று அதிகமான வாக்குகள் பதிவாகி, 26 லட்சத்து 92 ஆயிரத்து 45 பேர் அதாவது 43 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

இது குறித்து சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்க, அதிகமான இளைஞர்கள் வாக்களிக்க முன் வராததே இந்த அளவுக்கு வாக்குப்பதிவு குறைந்ததற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. நன்கு படித்து வேலைக்குச் செல்லும் அதிகம் இருக்கும் சென்னையிலேயே இப்படி தேர்தலில் வாக்களிக்க ஆர்வமில்லாமல் இருக்கிறார்களே என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

மற்றொரு பக்கம், பல முக்கியப் பிரபலங்களும் இந்த வாக்குப்பதிவை புறக்கணித்திருப்பதும் கவனத்துக்கு வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், அஜித், திரிஷா, சிவ கார்த்திகேயன், சிம்பு உள்ளிட்டோர்  தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வருவார்கள் என்று செய்தியாளர்களும், அவர்களது ஆதரவாளவர்களும் வெகு நேரம் காத்திருந்தனர். ஆனால் இவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வரவேயில்லை.

இவர்கள் யாரும் ஏன் வாக்களிக்க வரவில்லை என்று அவர்களது மேலாளர்களிடம் கேட்டதற்கு, சிலர் ஊரிலேயே இல்லை... படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறார்கள். சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கிறார், சிலர் வெளி மாநிலத்தில் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்கள் என்று பதிலளித்துள்ளனர்.

இது குறித்து அரசியல் ஆலோசகரும், சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான எம். சிதம்பரேசன் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அரசியல் மீது நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. காரணம், அரசியல் மாற்றுச் சக்திகளாகப் பார்க்கப்பட்ட நடிகர் கமல், சீமான் போன்றோரால் வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியவில்லை. தற்போது நடிகர் விஜய்-ஐத் தவிர வேறு எந்த நடிகரும், அரசியல் மற்றும் சமுதாய பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை. இதுதான் தற்போது வாக்களிப்பதன் மீதும் எதிரொலித்துள்ளது என்கிறார்.

நடிகர் விஜய், தனது பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்திருந்தார். இதுபோல சட்டப்பேரவைத் தேர்தலிலும் சைக்கிளில் வந்து வாக்களித்திருந்தது பெரும் கேள்விகளை எழுப்பியிருந்தது.

இது குறித்து பாமர மக்கள் கூறுகையில், எங்களைப் போன்ற எளிய மக்களை வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், இதுபோன்ற நட்சத்திரங்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே?  அதன் மூலமாகவாவது ஜனநாயகத்தில் எல்லோரும் சமம் என்று நினைக்கத் தோன்றும் என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com