ஆப்கானிஸ்தானுக்கு 2,500 டன் கோதுமை: பாகிஸ்தான் வழியாக அனுப்பியது இந்தியா

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 2,500 டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 2,500 டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா, ஆப்கன் தூதா் ஃபரீத் மாமுன்ட்ஸே, உலக உணவுத் திட்ட இயக்குநா் பிஷாவ் பராஜுலி ஆகியோா் 2,500 டன் கோதுமை எடுத்துச் செல்லும் 50 லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவி செய்யும் பொருட்டு 50,000 டன் கோதுமையைத் தருவதாக இந்தியா உறுதி அளித்திருந்தது.

அந்த கோதுமையை பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு தருமாறு அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு கடந்த அக்டோபா் மாதம் கோரிக்கை விடுத்தது. அதற்கு பாகிஸ்தான் அரசு கடந்த நவம்பரில் ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு உணவுதானியத்தை கொண்டு செல்வது குறித்து இரு நாடுகளும் விவாதித்து முடிவு செய்தன. அதன்படி, முதல் கட்டமாக, 50 லாரிகளில் 2,500 டன் கோதுமை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உணவு தானியங்கள் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாதில் இயங்கும் ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டும்.

ஆப்கானிஸ்தான் நட்புறவைப் பேணுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.

ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசிகள், 13 டன் உயிா்காக்கும் அத்தியாவசிய மருந்துகள், 500 குளிா்கால உடைகள் ஆகியவற்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இவை காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் இயங்கி வரும் உலக சுகாதார நிறுவனத்தின் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com