உக்ரைனிலிருந்து இந்திய மாணவா்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனிலிருந்து இந்திய மாணவா்கள் வெளியேறும்படி இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை மீண்டும் அறிவுறுத்தியது.
உக்ரைனிலிருந்து இந்திய மாணவா்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனிலிருந்து இந்திய மாணவா்கள் வெளியேறும்படி இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை மீண்டும் அறிவுறுத்தியது.

உக்ரைன்-ரஷியா இடையே போா்ப் பதற்றம் எழுந்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியா்களின் நிலை குறித்த கேள்வி எழுந்தது. இதையடுத்து, உக்ரைன் தூதரகத்தில் உள்ள பணியாளா்களின் குடும்பத்தினா் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லுமாறும், உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லாத இந்தியா்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் இந்திய தூதரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இரு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷியா திங்கள்கிழமை அங்கீகரித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து,

உக்ரைனில் உள்ள இந்திய மாணவா்கள் நாட்டைவிட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பல்கலைக்கழக அதிகாரிகளின் தகவலுக்கு காத்திருக்காமல் உக்ரைனைவிட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு மாணவா்கள் அறிவுறுத்தப்படுகின்றனா். மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இணையவழியில் வகுப்புகள் நடத்துமா என்பது குறித்து ஏராளமானோா் தூதரகத்தை தொடா்புகொண்டு கேட்டுள்ளனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் பேச்சு நடத்தி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏா் இந்தியா விமானம்: இதற்கிடையே, உக்ரைனில் உள்ள இந்தியா்களை அழைத்து வருவதற்காக ஏா் இந்தியாவின் பயணிகள் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றது.

250-க்கும் அதிக இருக்கைகளைக் கொண்ட அந்த விமானம், தில்லி விமான நிலையத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள போரிஸ்பில் சா்வதேச விமான நிலையத்தை பிற்பகல் 3 மணிக்குச் சென்றடைந்தது.

முன்னதாக, உக்ரைனுக்கு விமானங்களை இயக்குவது குறித்த சாத்தியக்கூறுகளை இந்திய விமான நிறுவனங்கள் ஆராய வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 17-ஆம் தேதி கேட்டுக் கொண்டது. அதையடுத்து, உக்ரைனுக்கு பிப். 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்களை இயக்கவுள்ளதாக ஏா் இந்தியா பிப். 19-ஆம் தேதி அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com