வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தொடர் வாதம் முன்வைப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற
வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தொடர் வாதம் முன்வைப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனுதாரர் சி.ஆர்.ராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 31 பி, சி-இன் கீழ் பாதுகாப்பு உள்ளது. மேலும், 2006-ஆம் ஆண்டில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கும், 2009-ஆம் ஆண்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால், இந்தச் சட்டத்துக்கும் அதுபோன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. ஜனார்த்தனம் கமிட்டி அறிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் 65 லட்சம் வன்னியர் பிரிவைச் சேர்ந்த சமூகத்தினர் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது' என்று வாதிட்டார்.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வழக்குரைஞர் டி.குமணன் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் முன்வைத்த வாதம்:
1957-ஆம் ஆண்டில் தமிழக அரசு முதல்முறையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் எனும் உள்பிரிவைக் கொண்டு வந்தது. கல்வியில் இந்தப் பிரிவினருக்கு சலுகை அளிக்கும் வகையில், இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள 58 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் முதலாவதாக வன்னியகுல சத்திரிய ஜாதி இடம் பெற்றுள்ளது. அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக, பொருளாதார நிலைமையை அறிவியல் பூர்வமாக மதிப்பிட 1969-இல் ஏ.என். சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இடம்பெற்றுள்ள 7 ஜாதிகளைக் கொண்ட வன்னியர் குல சத்திரிய வகுப்பினர், எம்பிசி பிரிவில் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும் கல்வியிலும், வேலைவாப்பிலும் உரிய சதவீதத்தைப் பெற முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
13.12.1982-இல் அமைக்கப்பட்ட அம்பா சங்கர் ஐஏஎஸ் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31-இல் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதில், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது. 
இந்த நிலையில், இந்திரா சாஹ்னி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் சட்டநாதன் மற்றும் அம்பா சங்கர் ஆணையத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உள்ஒதுக்கீடு விவகாரமும், உரிய கணக்கிடத்தக்க தரவுகள் அடிப்படையில்தான் செய்யப்பட்டுள்ளன. தமிழக பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையத்தின் அறிக்கையை கர்நாடக அரசுக்கு எதிரான எஸ்.வி.ஜோஷியின் வழக்கில் உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என வாதிட்டார்.
எஸ்.ராமதாஸ் தரப்பில் வழக்குரைஞர் தனஞ்ஜெயனுடன் மூத்த வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, "சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டம், அளவிடத்தக்க தரவுகள் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தை வகைப்படுத்தும்போது ஆணையத்தையோ அல்லது வேறு நபரையோ ஆலோசிக்கலாம் என 2020-இல் உச்சநீதிமன்றம் அளித்த  ஒரு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல் கமிஷன் வழக்கில் அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்கூட இதுபோன்ற உள்ஒதுக்கீடு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பா சங்கர், ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கைகள் மண்டல் கமிஷன் அரசியல் சாசன அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவை நிராகரிக்கப்படவில்லை. அதன் அடிப்படையில்தான் வன்னிய குல சத்திரிய வகுப்பினருக்கு  உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2021-இல் கொண்டுவரப்பட்டது. மேலும், ஜனார்த்தனம் கமிட்டி அறிக்கை நிராகரிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று நிராகரிக்கப்படவில்லை. இதுபோன்று முழுமையாக ஆராயாமல் இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்து உத்தரவிட்டிருப்பது தவறாகும்' என்றார் அவர்.
எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிடுகையில், "2018-ஆம் ஆண்டைய 102-ஆவது சட்டத் திருத்தமானது தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்தின் அதிகாரம், கடைமை, கட்டமைப்புமுறை ஆகியவற்றைக் கையாளுகிறது. இந்தச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 342ஏ  சமூக, பொருளாதாரா ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக ஒரு குறிப்பிட்ட ஜாதியை அறிவிக்கை செய்யும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைக் கையாளுகிறது. அதேபோன்று,  வகுப்புப் பட்டியலை மாற்றம் செய்யும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் கையாளுகிறது. 102-ஆவது சட்டத் திருத்தத்தின்படி தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்துடன், சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஆலோசிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுபோன்று எந்த வழிமுறையும் இந்த வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தில் பின்பற்றப்படவில்லை. 105-ஆவது சட்டத் திருத்தமும் இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது' என்றார்.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது "நீதிமன்ற தீர்ப்புகள் சிலவற்றை அரசு வழக்குரைஞர் (டி.குமணன்) டிஜிட்டல் வடிவத்தில் தொகுத்து அரசுக்கு செலவை மிச்சப்படுத்திவிட்டதாக மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் கூறினார். அதற்கு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், "அதுபோன்று கூறுவதற்கில்லை. அவர்கள் நல்ல பணியைச் செய்திருக்கிறார்கள்' என்றார். முன்னதாக, இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஒரே தொகுப்பாக தயாரித்து அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com