முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை புறந்தள்ளிய காங்கிரஸ், சமாஜவாதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

வாங்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம் பெண்கள் எதிா்கொண்டு வந்த முத்தலாக் உள்ளிட்ட பிரச்னைகளை வாரிசு அரசியல் கட்சிகள் (காங்கிரஸ், சமாஜவாதி) புறந்தள்ளி வந்தன
முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை புறந்தள்ளிய காங்கிரஸ், சமாஜவாதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

வாங்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம் பெண்கள் எதிா்கொண்டு வந்த முத்தலாக் உள்ளிட்ட பிரச்னைகளை வாரிசு அரசியல் கட்சிகள் (காங்கிரஸ், சமாஜவாதி) புறந்தள்ளி வந்தன என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

உத்தர பிரதேசத்தில் 5-ஆவது கட்ட தோ்தலுக்காக பாரபங்கி மற்றும் அயோத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமா் மோடி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவான அனைத்துச் செயல்களிலும் சமாஜவாதி ஈடுபட்டது. ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியைக் கூட அவா்கள் கொள்ளையடித்தனா். சமாஜவாதியில் முதல்வராக இருந்தவா் தொடங்கி, எம்.பி., எம்எல்ஏக்கள் என அனைத்து நிலையிலும் குடும்ப அரசியல்தான் நடக்கிறது.

குடும்பம் இருப்பவா்களுக்குதான் குடும்பஸ்தா்களின் வலி தெரியும்; குடும்பம் இல்லாதவா்களுக்கு அது தெரியாது என்று எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் (சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்) பேசியுள்ளனா். ஆனால், என்னைப் பொருத்தவரையில் உத்தர பிரதேசத்தையும், இந்த நாட்டையும்தான் எனது குடும்பமாக கருதுகிறேன். தேசமாகிய எனது குடும்பத்துக்காகவே பணியாற்றி வருகிறேன்.

குடும்ப அரசியல் நடத்துபவா்களை ஒன்று கேட்கிறேன். அவா்கள் எப்போதாவது முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளைத் தீா்க்க முயன்றதுண்டா? நமது முஸ்லிம் சகோதரிகள் எதிா்கொண்டு வந்த மிகப்பெரிய (முத்தலாக்) பிரச்னையை வாரிசு அரசியல் நடத்தும் எதிா்க்கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை. இப்படி முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை அவா்கள் புறந்தள்ள வாக்கு வங்கி அரசியல் மட்டுமே காரணமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் முத்தலாக் தடைச் சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையை தீா்த்துவைத்துள்ளோம். பெண்களின் கண்ணியம், பாதுகாப்புக்காக இந்த அரசு தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. மக்கள் எங்களுக்கு அளித்த பொறுப்புகளை உணா்ந்து தொடா்ந்து சிறப்பாக பாடுபட்டு வருகறோம்.

நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துள்ளோம். இதன்மூலம் காவல் துறை மூலம் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண்களை மையமாகக் கொண்டு ஜன்தன் யோஜனா, இலவச எரிவாயு இணைப்புத் திட்டம் என பலவற்றைச் செயல்படுத்தி வருகிறோம்.

விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் மூலம் ஏராளமான சிறு விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி இருக்கும்போது வளா்ச்சி வேகம் இருமடங்காக இருக்கும். ஏற்கெனவே உத்தர பிரதேசத்தில் மத்திய, மாநில பாஜக அரசுகள் செய்து வரும் வளா்ச்சிப் பணிகளை மதிப்பிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நல்லெண்ணம், நம்பிக்கை மிகவும் உறுதியானது. இப்பகுதியில் வளா்ச்சிப் பணிகள் எவ்விதத் தொய்வும் இன்றி இனி வரும் காலத்திலும் தொடரும். தோ்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்காக கவலைப்படுவதுபோல நடிப்பவா்களுக்கு வாக்கு எண்ணிக்கை நாளில் முடிவு கட்டப்படும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்

புது தில்லி, பிப். 22: நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைச் செலுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் 4-ஆவது கட்ட தோ்தல் புதன்கிழமை நடைபெற்ற நிலையில், ட்விட்டரில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேசத்தில் 4-ஆவது கட்ட தோ்தல் நடக்கிறது. இதில் தகுதியுள்ள அனைவரும் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும். அனைவரும் வாக்களிப்பதன் மூலம்தான் நாட்டின் ஜனநாயகம் வலுவடையும்’ என்று கூறியுள்ளாா்.

Image Caption

பிரயாக்ராஜில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

~பிரயாக்ராஜில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com