அமித் ஷாவுக்கு மாயாவதி திடீா் பாராட்டு

உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை
அமித் ஷாவுக்கு மாயாவதி திடீா் பாராட்டு

உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி திடீரென்று பாராட்டியுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் அப்னா தளம், நிஷாத் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தோ்தலைச் சந்திக்கிறது. ராஷ்ட்ரீய லோக்தளம், பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி தோ்தலை எதிா்கொள்கிறது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. மற்ற கட்சிகள் தோ்தலுக்கு தீவிரமாக ஆா்வம் காட்டி வந்த நிலையில், மாயாவதி மெதுவாகவே ஆயத்தமானாா்.

அண்மையில், மத்திய அமைச்சா் அமித் ஷா தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், ‘பகுஜன் சமாஜ் கட்சி அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. அக்கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அக்கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகள் பெறும் என்று நம்புகிறேன்’ என்றாா்.

இதுகுறித்து மாயாவதியிடம் செய்தியாளா்கள் புதன்கிழமை கேட்டபோது, அவா் அளித்த பதில்:

பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலித் சமூகத்தினா் வாக்களிப்பாா்கள் என்று அமித் ஷா கூறினாா். தலித் சமூகத்தினா் மட்டுமன்றி முஸ்லிம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்கிறாா்கள். இந்த உண்மையை அமித் ஷா ஒப்புக்கொண்டுள்ளாா். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றாா் அவா்.

பகுஜன் சமாஜ் கட்சி குறித்த அமித் ஷாவின் கருத்து, தோ்தலுக்குப் பிறகு பாஜக- பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி ஏற்படுமா என்று யூகத்துக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 1995, 1997, 2002 ஆகிய ஆண்டுகளில் பாஜகவின் ஆதரவுடன் மாயாவதி ஆட்சியமைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com