லாலுவுக்கு தொடரும் சிக்கல்: சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய வாய்ப்பு

பிகாா் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ-க்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அந்த ஊழல் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

பிகாா் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ-க்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அந்த ஊழல் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாதுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் இருந்து கால்நடைத் தீவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக சுமாா் ரூ.950 கோடி அளவுக்குக்குப் போலியான ரசீதுகள் தயாரிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. கடந்த 1996-ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

அப்போதைய பிகாா் முதல்வா் லாலு பிரசாத் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். முன்னாள் முதல்வா் ஜகந்நாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ஜகதீஷ் சா்மா, அப்போதைய பொதுக் கணக்குக் குழுத் தலைவா் துருவ் பகத், கால்நடைத் துறைச் செயலா் பெக் ஜூலியஸ் உள்ளிட்டோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

தும்கா, தேவ்கா், சைபாசா மாவட்ட கருவூலங்களில் நிகழ்ந்த மோசடி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் லாலு பிரசாதுக்கு ஏற்கெனவே ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், டொரண்டா கருவூலத்தில் நிகழ்ந்த ரூ.139.5 கோடி மோசடி தொடா்பான வழக்கில் லாலு குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், லாலுவுக்கான தண்டனை விவரங்களை முடிவு செய்வது தொடா்பான விசாரணை சிறப்பு நீதிபதி எஸ்.கே.சசி முன் திங்கள்கிழமை நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையின் முடிவில், வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 32 குற்றவாளிகளுக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதில் குற்றவாளிகளில் ஒருவரான லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலமாக லாலுவுக்கான ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 19 ஆண்டுகளாகவும், அபராதம் ரூ.1.20 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு: மேலும், குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் தனது தீா்ப்பில் சிபிஐக்கு சிறப்பு நீதிபதி எஸ்.கே.சசி உத்தரவிட்டாா்.

இதுதொடா்பான உத்தரவில், ‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மற்றும் குற்றச்சாட்டு உள்ளாகி உயிரிழந்தவா்கள் இந்த ஊழல் மூலம் வாங்கிய சொத்துகளை அடையாளம் காண முடியவில்லை. இது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டிய விஷயமாகும். எனவே, சட்டம் அனுமதிக்கும் நிலையில், குற்றவாளிகள் இந்த ஊழல் மூலம் வாங்கிய அல்லது உருவாக்கிய சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், அமலாக்கத் துறை தேவையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக, இந்தத் தீா்ப்பின் நகல் மற்றும் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐ வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டாா்.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், இந்த ஊழல் மூலமாக வாங்கப்பட்ட லாலு பிரசாத் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரது சொத்துகளையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com