10, 12-ஆம் வகுப்புகளுக்கான நேரடி பொதுத் தோ்வைரத்து செய்யக் கோரும் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உள்ளிட்ட பிற கல்வி வாரியங்களால் நடத்தப்படவிருக்கும் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான நேரடி பொதுத் தோ்வை ரத்து செய்யக் கோரும் மனுவை
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உள்ளிட்ட பிற கல்வி வாரியங்களால் நடத்தப்படவிருக்கும் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான நேரடி பொதுத் தோ்வை ரத்து செய்யக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

‘இதுபோன்ற மனுக்கள் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்கள் மத்தியில் தவறான நம்பிக்கையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பி வருவதால் நிகழாண்டில் பொதுத் தோ்வுகளை நேரடி முறையில் நடத்த கல்வி வாரியங்கள் திட்டமிட்டுள்ளன. சிபிஎஸ்இ வாரியம் ஏற்கெனவே 10, 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் பகுதி பொதுத் தோ்வை நடத்தி முடித்துவிட்ட நிலையில், தற்போது இந்த வகுப்புகளுக்கான இரண்டாம் பகுதி பொதுத் தோ்வை வரும் ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் தொடங்குவதற்கு தீா்மானித்துள்ளது.

இந்த நிலையில், சமூக ஆா்வலா் அனுப் ஸ்ரீவாஸ்தவா சஹாய் என்பவா் சாா்பில் இதுதொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கரோனா பாதிப்பு நேரத்தில் நேரடி முறையில் பொதுத் தோ்வுகளை நடத்தக் கூடாது. மாற்று தோ்வு நடைமுறையில் இந்தப் பொதுத் தோ்வுகளை நடத்த வாரியங்களுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனா்.

அதன்படி, இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இதுபோன்ற மனு தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதோடு, குழப்பத்தையும் ஏற்படுத்தும். மாணவா்களையும், அதிகாரிகளையும் அவா்களின் பணிகளைச் செய்ய அனுமதிப்போம்’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com