உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நிலைமையை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தற்போதைய நிலைமையை அமைதி, தைரியம், பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் பார்த்தா சத்பதி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நிலைமையை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்

புது தில்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தற்போதைய நிலைமையை அமைதி, தைரியம், பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் பார்த்தா சத்பதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இந்தியத் தூதர் பார்த்தா சத்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

நிலைமை மிகவும் பதற்றமாகவும் நிச்சயமற்றதாகவும் உள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் முயற்சித்து வருகிறது.

நான் தலைநகர் கீவில் இருந்து உங்களை (இந்தியர்கள்) தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். இன்று காலையில் உக்ரைன் தாக்கப்பட்ட செய்தி கிடைத்தது. இதையடுத்து உக்ரைன் வான்வழி மூடப்பட்டுள்ளது. ரயில்வே அட்டவணைகள் குழப்பமாக உள்ளன. சாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தற்போதைய நிலைமையை அமைதி, தைரியம், பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். கீவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்ந்து திறந்திருந்து செயல்படும். 

நீங்கள் தற்போது எங்கே இருக்கிறீர்களோ அதே இடத்தில் தொடர்ந்து இருங்கள். வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் உங்களுக்கு வழக்கமான பகுதிகளுக்குத் திரும்பி விடுங்கள். கீவ் நகரில் வசிப்பவர்கள் உங்கள் நண்பர்கள், சகாக்கள், பல்கலைக்கழகங்கள், இநதிய சமூக உறுப்பினர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருங்கள்.  உக்ரைனில் உள்ள இந்திய சமூகத்தினரை இந்தியத் தூதரகம் ஏற்கெனவே அணுகியுள்ளது. சக இந்தியர்களுக்கு உதவுமாறு அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.  

எனக்கும், தூதரகத்துக்கும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. உதவிகளை வழங்குவதற்கு எங்களாலான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அவசரத் தேவை ஏற்பட்டால் அவசரத் தொலைபேசி எண்களில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியத் தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள் என்று பார்த்தா சத்பதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் தற்போது 20,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்  மாணவர்களாவர்.

இந்தியாவின் நிலைப்பாட்டில் அதிருப்தி

ரஷியாவின் ராணுவத் தாக்குதலால் எழுந்துள்ள நெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் அதிருப்தி அளிப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர இகோர் போலிகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் "ரஷியாவுடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. போர் நிலைமையைத் தணிப்பதற்கு இந்தியாவால் மேலும் ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் சொல்வதை புதின் கேட்கிறார். ரஷியாவுடனான இந்த நெருக்கத்தை, நிலைமையைக் கட்டுப்படுத்த இந்தியா பயன்படுத்த முடியும். எனினும், இந்த நெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது' என்று தெரிவித்தார்.

தூதரகம் புதிய அறிவுரை

உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்களுக்கு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள புதிய அறிவுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது கடினமாக இருக்கும். கீவ் நகரில் தங்க இடமின்றித் தவிக்கும் மாணவர்களைத் தங்க வைப்பதற்காக உரிய அமைப்புகளுடன் தூதரகம் தொடர்பு கொண்டு வருகிறது. சில இடங்களில் எச்சரிக்கை ஒலியும், வெடிகுண்டு எச்சரிக்கைகளும் கேட்பதாக அறிகிறோம். அதுபோன்ற சூழலை நீங்கள் எதிர்கொண்டால் குண்டு துளைக்காத பதுங்குமிடங்களில் பாதுகாப்பாக இருங்கள். 

அவற்றை கூகுள் மேப் இணையதளத்தில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவற்றில் பெரும்பாலானவை தரைக்கு அடியில் மெட்ரோ நிலையங்களில் உள்ளன.

இப்போதைய சூழலுக்கு தீர்வு காண தூதரகம் முயற்சித்து வருகிறது. பாதுகாப்புடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள். உங்களது ஆவணங்களை எப்போதும் கையில் வைத்திருங்கள் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com