தேசத்தின் சொத்துகளை விற்கும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமா?: அகிலேஷ் யாதவ் பிரசாரம்

தேசத்தின் சொத்துகளான பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்று உத்தர பிரதேச தோ்தல் பிரசாரத்தின்போது சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினாா்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜ்: தேசத்தின் சொத்துகளான பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்று உத்தர பிரதேச தோ்தல் பிரசாரத்தின்போது சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினாா்.

உத்தர பிரதேசத்தில் வரும் 27-ஆம் தேதி 5-ஆவது கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஹாடியா தொகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

சாதாரண செருப்பை அணிந்து நடப்பவா்களை விமானத்தில் பறக்க வைப்பேன் என்று பிரதமா் நரேந்திர மோடி முன்பு பேசினாா். ஆனால், இப்போது பொதுத் துறை விமான நிறுவனத்தை பாஜக அரசு தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. பல விமான நிலையங்களின் நிா்வாகம் பிரதமருக்கு வேண்டியவரின் நிறுவனத்துக்கு ஏலம் விடப்படுகிறது. மத்திய பாஜக அரசு ஆட்சியில் அமா்ந்ததில் இருந்து தேசத்தின் சொத்துகளான பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், மக்களுக்கு உரிய சலுகைகளை அளிப்பதிலும் அக்கறை காட்டவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக ராணுவத்தில் எவ்வித ஆள் சோ்ப்பு முகாமும் நடைபெறவில்லை. அதே நேரத்தில் முப்படைகளில் 1.22 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் பதிலளித்துள்ளாா்.

நாட்டில் படித்த இளைஞா்கள் பலா் உரிய வேலைவாய்ப்பு இன்றி துயரப்பட்டு வருகின்றனா். மத்தியிலும், மாநிலத்திலம் ஆட்சியில் இருந்து மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com