ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்காததால் .. உக்ரைன் காவலர்கள் தாக்கியதாக இந்திய மாணவர்கள் புகார்

ஐக்கிய நாடுகள் சபை ரஷியாவுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காததால், உக்ரைன் காவலர்கள் தங்களை மோசமாக நடத்துவதாக இந்திய மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உக்ரைன் காவலர்கள் தாக்கியதாக இந்திய மாணவர்கள் புகார்
உக்ரைன் காவலர்கள் தாக்கியதாக இந்திய மாணவர்கள் புகார்

புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபை ரஷியாவுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காததால், உக்ரைன் காவலர்கள் தங்களை மோசமாக நடத்துவதாக இந்திய மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் பலரும், தங்களை உக்ரைன் காவலர்கள் மோசமாக நடத்தியதாகவும் அவமரியாதை செய்ததாகவும் கூறியுள்ளனர்.

உக்ரைன் - போலந்து நாட்டு எல்லையில், கடுங்குளிரில் சுமார் 72 மணி நேரம் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் பலரும், உக்ரைன் காவலர்களால் அடித்து, உதைக்கப்பட்டதாகவும், சில மாணவர்களின் செல்லிடப்பேசிகளை அவர்கள் பிடுங்கிக் கொண்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவர் சந்தீப் கௌர் கூறுகையில், ஆரம்பத்தில் எல்லைத் தாண்டி போலந்து செல்ல மாணவர்களை உக்ரைனியர்கள் அனுமதித்து வந்தனர். சில நேரம் கழித்து, யாரையும் போலந்து நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

நான் எனது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் வெகு நேரம் காத்திருந்தோம். முதலில் எங்கள் அனைவரையும் வரிசையாக நிற்குமாறு கூறினார்கள். நாங்களும் நின்றிருந்தோம். பிறகு பெண்களை தனி வரிசையில் நிற்குமாறு கூறினார்கள். என்னை மட்டும் எல்லைத் தாண்டிச் செல்ல அனுமதித்தார்கள். அப்போது அதே வரிசையில் நின்றிருந்த எனது சகோதரர் தானும் வரிசையில் நின்றிருப்பதாகவும், எல்லைத் தாண்டிச் செல்ல அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால் அவரை காவலர்கள் அடித்து உதைத்தனர் என்கிறார் கௌர்.

அது மட்டுமல்ல, உக்ரைனின் எல்லைத் தாண்டி இந்திய மாணவர்கள் வருவதற்கு, இந்திய தூதரகம் தரப்பில், உக்ரைன் அதிகாரிகளிடம் எந்த முறையீடும் செய்யப்படவில்லை. நாங்கள் உக்ரைனைக் கடந்து போலந்து எல்லைக்குள் நுழைந்த பிறகுதான் இந்திய தூதரக அதிகாரிகளையே பார்க்க முடிந்தது.  ஆனால், உக்ரைனில் இந்திய தூதரக அதிகாரிகள் எங்குமே இல்லை. உக்ரைனிலிருந்து எல்லையை வந்தடையும் இளைஞர்களை உக்ரைன் காவலர்கள் மிக மோசமாக நடத்துகிறார்கள். நான் மட்டுமே எல்லைத் தாண்டி வந்துள்ளேன். எனது சகோதரன் மற்றும் அவனது நண்பர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அங்குதான் நிலைமை மிக மோசமாக உள்ளது என்கிறார் கௌர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com