
கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் இதுவரை 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏ-க்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார் மேலும் கூறியது:
"இதுவரை 10 அமைச்சர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு, பிறந்தநாள் மற்றும் மற்ற கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
இதையும் படிக்க | நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 1,431 ஆக அதிகரிப்பு
புதிய வகை ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுகிறது என்பதை நாம் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் புனே மற்றும் மும்பையில் பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரிக்கின்றன. பாதிப்பு எண்ணிக்கைகள் மேலும் அதிகரித்தால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். கடுமையான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க அனைவரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றார் அவர்.
கடந்தாண்டின் கடைசி 12 நாள்களில் மகாராஷ்டிர கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் பெருமளவில் அதிகரித்தன. அங்கு வியாழக்கிழமை பாதிப்புகளைக் காட்டிலும் 50 சதவிகிதம் கூடுதலாக 8,067 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.