Enable Javscript for better performance
அதிகனமழை எதிரொலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அதிகனமழை எதிரொலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்

    By DIN  |   Published On : 01st January 2022 11:33 AM  |   Last Updated : 01st January 2022 02:42 PM  |  அ+அ அ-  |  

    stalin

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

     

    சென்னை: கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் முன்கணிக்கப்படாத அதிகனமழை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதையும் படிக்க.. புத்தாண்டில் இஸ்ரேலிலிருந்து வந்திருக்கும் சற்று கவலை தரும் செய்தி

    தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தினை மேம்படுத்திட  முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், பெருமழைக்கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சார்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாதநிலை உள்ளதை காண்கிறோம். 

    உதாரணமாக 30-12-2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து அதே சமயம் இடியுடன் கூடிய இலேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது. பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று மதியம் முதல் இரவு வரை பெய்தது. 

    மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கன மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பல பகுதிகள் மூழ்கி, அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் ஏற்பட்டது.

    சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது. இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

    இந்த நிகழ்வுகள் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற “ரெட் அலர்ட்” சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp