
கோப்புப்படம்
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாகச் உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், "ஒமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் மருத்துவ தேவைகள் திடீரென அதிகரிப்பதே இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒமைக்ரான் நாட்டில் மிக வேகமாக பரவும்.
குறைவான நாள்களில் பலரும் பாதிக்கப்படுவார்கள். உலகெங்கும் இதேநிலை தான். இதன் காரணமாகவே உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகின் பல நாடுகளிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மருத்துவமனைகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சாதாரண சிகிச்சை முதல் தீவிர சிகிச்சை வரை அனைத்து மருத்துவ தேவைகளும் அதிகரித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லேசான கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மக்கள் மருத்துவரிடம் செல்ல விரும்புகின்றனர். அதற்கு நாம் தயாராக வேண்டும். ஒமைக்ரான் அதிகரிக்கும் நிலையில், இதைச் சமாளிக்க நமக்கு ஒரு திட்டம் தேவை.
டெலிஹெல்த் மற்றும் டெலிமெடிசின் சேவைகளை இப்போது நாம் அதிகரிக்க வேண்டும். கரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை வீட்டிலேயே அல்லது தனிமைப்படுத்தல் மையங்களிலேயே சிகிச்சை அளிக்கலாம். அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவையில்லை என்றால் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரத் தேவையில்லை.
ஒமைக்ரான் பரவலால் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளில் பாதிப்பு மோசமாக இருக்காது. மாறாக வீடுகளில் தனிமையில் இருப்போர் லேசான பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகரிக்கும். அதேநேரம் அனைவருக்கும் இதே லேசான பாதிப்பைத் தான் ஏற்படுத்தும் என்று நம்மால் கூறிவிட முடியாது.
இதையும் படிக்க | அண்ணல் காந்தியை அவமதிக்கும் விதமாக கருத்து...இந்து மதத் தலைவர் கைது
எனவே, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதைச் சாதாரண காய்ச்சல் என்று பொதுமக்கள் நினைத்துவிடக் கூடாது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் இருந்து ஒமைக்ரான் பரவல் குறித்து தகவல்கள் நமக்குக் கிடைத்து வருகிறது. டெல்டா உள்ளிட்ட மற்ற வகை கரோனாவை காட்டிலும் இது 4 மடங்கு வேகமாகப் பரவுகிறது.
அதேபோல நான்கில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இது குறைவாகத் தெரிந்தாலும் அதிகப்படியான நபர்களுக்கு வைரஸ் பரவும் போது, மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்கும். இதைத் தடுக்க முடியாது. இதை எதிர்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்,