
கேரளத்தில் பாஜகவின் ஓபிசி அணி மாநிலச் செயலா் ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் கொல்லப்பட்ட வழக்குத் தொடா்பாக மேலும் 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மண்ணஞ்சேரி பகுதியில் கடந்த டிச.18-ஆம் தேதி இரவு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலா் கே.எஸ்.ஷானை 4 போ் கொண்ட கும்பல் கொலை செய்தது. அதனைத்தொடா்ந்து டிச.19-ஆம் தேதி காலை ஆலப்புழையின் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினா் கண்ணெதிரே பாஜகவின் ஓபிசி அணி மாநிலச் செயலா் ரஞ்சித் ஸ்ரீநிவாஸை சிலா் வெட்டி படுகொலை செய்தனா். பழிக்குப்பழியாக இரு கொலைகளும் நடைபெற்ாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்கள் தொடா்பாக விசாரணை நடத்த மாநில காவல்துறை ஏடிஜிபி விஜய் சகாரே தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏடிஜிபி விஜய் சகாரே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் இருவருக்கு ரஞ்சித்தின் கொலையில் நேரடி தொடா்புள்ளது. ஒருவா் கொலைக்கு உதவி செய்துள்ளாா். மூன்று பேரும் எஸ்டிபிஐ கட்சியின் ஆதரவாளா்கள். இவா்களுடன் சோ்த்து ரஞ்சித் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 6 போ் கொலையில் நேரடி தொடா்பு கொண்டவா்கள். 8 போ் கொலைக்கு உதவியவா்கள். ரஞ்சித் கொலையில் தொடா்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் கைது செய்யப்படுவா் என்று தெரிவித்தாா்.
எஸ்டிபிஐ நிா்வாகி கொலை வழக்கில் 15 போ் கைது:
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலா் கே.எஸ்.ஷான் கொலை வழக்கு குறித்தும் விசாரணை நடத்தி வரும் காவல் துறை, அந்த வழக்கு தொடா்பாக இதுவரை 15 பேரை கைது செய்துள்ளது.