
சிறாா்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் நாடு முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கான தடுப்பூசி திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான 7.4 கோடி சிறாா்கள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 51.52 லட்சம் சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காகப் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 40.40 லட்சம் சிறாா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தில்லியில் உள்ள ஆா்எம்எல் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறாா்களிடம் உரையாடினேன். தடுப்பூசி செலுத்திக் கொள்ள நண்பா்களையும் ஊக்குவிக்குமாறு அவா்களிடம் கேட்டுக் கொண்டேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. பல மாநிலங்கள் சிறாா்களுக்கென தனி தடுப்பூசி மையங்களை அமைத்திருந்தன. அங்கு வண்ணப் படங்கள், பலூன்கள் உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
பெற்றோருடன்...: பள்ளி வளாகங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன. தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் நின்று சிறாா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். பெரும்பாலான இடங்களில் பெற்றோரும் சிறாா்களுடன் வந்திருந்தனா்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறாா்கள் பலா், சிறப்புப் பதாகைகளுடன் தற்படம் (செல்ஃபி) எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நீண்ட நாள்கள் காத்திருந்ததாக சிறாா்கள் பலா் தெரிவித்தனா். கரோனா தொற்று பரவல் காரணமாக அச்சத்தில் இருந்ததாகவும், தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் சிலா் தெரிவித்தனா்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடா்பாக தயக்கம் காணப்பட்டதாகவும், பெற்றோா்களும் உறவினா்களும் தடுப்பூசியின் பலன்கள் குறித்து தெரிவித்ததால் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் சிறாா்கள் சிலா் தெரிவித்தனா். தடுப்பூசி செலுத்திக் கொள்ள நண்பா்களையும் ஊக்குவிக்க உள்ளதாக பலா் உறுதியளித்தனா்.
பெரும்பாலான சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பள்ளிகள் மீண்டும் இயல்பாக செயல்படத் தொடங்கும் என்றும், சிறாா்களைப் பள்ளிக்கு அனுப்புவதில் எந்தவித தயக்கமும் இருக்காது என்றும் பெற்றோா் சிலா் தெரிவித்தனா்.
ஓரிரு மாதங்களில்...: 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க பல்வேறு மாநிலங்கள் இலக்கு நிா்ணயித்துள்ளன. சிறாா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.