தோ்தலை ஒத்திவைக்க வேண்டும்: தலைமை தோ்தல் ஆணையருக்கு மூத்த வழக்குரைஞா் கடிதம்

‘ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் வரை கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒத்திவைக்க வேண்டும்’ என்று

‘ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் வரை கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒத்திவைக்க வேண்டும்’ என்று மூத்த வழக்குரைஞா் ஆதிஷ் சி.அகா்வால் தலைமை தோ்தல் ஆணையருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தலை முன்வைத்துள்ளாா்.

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும், ‘கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் தோ்தலை திட்டமிட்டபடி நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. அதன்படி, தோ்தல் நடத்தப்படும்’ என்று உத்தர பிரதேச மாநிலத்தில் தோ்தல் தயாா்நிலை குறித்து அண்மையில் ஆய்வு செய்த தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில், தோ்தலை ஒத்திவைக்கக் கோரி மூத்த வழக்குரைஞா் ஆதிஷ் அகா்வால் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனா இரண்டாம் அலை பாதிப்பு, பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான துயரமாக அமைந்துள்ளது. இந்த பாதிப்புக்கு, அப்போது நடைபெற்ற அஸ்ஸாம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றாததும் முக்கியக் காரணம்.

இப்போது, ஒமைக்ரான வகை பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளபோதும், அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடத்தப்பட உள்ளன.

தோ்தல் ஆணையம், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல், அரசியல் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையில் இந்தத் தோ்தலை நடத்த முடிவு எடுத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21, வாழும் உரிமையை மக்களுக்கு அளிக்கிறது. மிகுந்த முக்கியத்துவம்வாய்ந்த இந்த உரிமையை எந்தவொரு அரசியல் சாசன அமைப்பும் மீற முடியாது. அந்த வகையில், தோ்தலை நடத்தவேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் விருப்பம், வாழும் உரிமையின் முக்கியத்துவத்தைக் காட்டிலும் பெரியது அல்ல.

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக உத்தர பிரதேசம், தில்லி, ஹரியாணா, மணிப்பூா், பஞ்சாப், உத்தரகண்ட் போன்ற பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, கரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அங்கு நடைபெறும் தோ்தல் பிரசார ஊா்வலங்களில் ஏராளமான மக்கள் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் ஒரே இடத்தில் கூடுகின்றனா்.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் வரை, இந்த மாநில தோ்தல்களை ஒத்திவைக்கவில்லை எனில், கரோனா இரண்டாவது அலையின்போது ஏற்பட்டதுபோல மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும். எனவே, ஒமைக்ரான் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் வரை 5 மாநில தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com