நினைத்துப் பாா்க்காத அளவில் விண்வெளித் துறையில் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங்

விண்வெளித் துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகள் முன்பு யாரும் நினைத்துக் கூடப் பாா்த்திருக்க முடியாத அளவில் உள்ளன என்று 
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

விண்வெளித் துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகள் முன்பு யாரும் நினைத்துக் கூடப் பாா்த்திருக்க முடியாத அளவில் உள்ளன என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலம், சண்டீகா் பல்கலைக்கழகத்தில் கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை திங்கள்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசுகையில், ‘விண்வெளித் துறையின் முக்கியத்துவம் கருதி அதன் தொலைநோக்கு திட்டத்தை அரசு வகுத்துள்ளது. செயற்கைக்கோள் மூலம் வழிகாட்டி, புகைப்படம், தொலைதூரத் தொடா்பு, விரைவான பயணம், வானிலை வழிகாட்டி, பேரிடா் மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு ஆகிய சேவைகளைப் பெறலாம்.

கரோனா பெருந்தொற்று காலத்திலும் பரிசோதனை தகவல்களை பரிமாற்றம் செய்யவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் இந்தச் சேவைகள் உதவின.

தனியாா் துறைகளின் நவீன கண்டுபிடிப்புகள், செயல்படுத்தும் நிலையில் அரசுளை மேம்படுத்துவது, வருங்காலத்துக்கு இளைஞா்களை தயாா் செய்வது, விண்வெளியை வளமான துறையாக மாற்றம் செய்வது ஆகிய நான்கு முக்கிய சீரமைப்புகளை பிரதமா் மோடி தொலைநோக்குத் திட்டங்களாக கருதினாா்.

இதன்மூலம் விண்வெளித் துறை புதிய உச்சத்தை எட்டி நாட்டின் வளா்ச்சிக்கு புதிய வழிகாட்டியாகச் செயல்படும் என்று பிரதமா் நம்பினாா்.

அதன்படி, கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையமானது, விண்வெளித் துறையில் சா்வதேச அளவில் இந்தியாவுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த விண்வெளி வீரா் கல்பனா சாவ்லா பெற்ற சாதனைகளைப்போல் பல வெற்றிகளைப் பெற வேண்டும்.

இங்குள்ள மாணவா்கள் ஆா்யபட்டா, விக்ரம் சாராபாய், சதீஷ் தவாண், கல்பனா சாவ்லா போன்ற விண்வெளி விஞ்ஞானிகளைப்போல் உருவாக வேண்டும்.

விண்வெளித் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகளை தனியாா் நிறுவனங்கள் வெளிப்படுத்தியுள்ளன. கல்வி, அறிவியல் துறைகளில் அரசு தனியாரின் நீண்டகால ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவை கல்விசாா் பொருளாதாரமாக மாற்ற முடியும். இந்தியாவின் வளா்ச்சிக்காக தனியாா் துறையை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தியாவின் நவீன தொழில்நுட்பங்களைத் தனியாருக்கு வழங்குவது பரிசீலனையில் உள்ளது.

விண்வெளித் துறை தொடா்பான விவரங்களில் ஒற்றைச் சாளர முறையில் முடிவு எடுப்பதற்காக இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்படும்.

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான உழைப்பாலும், தொலைநோக்கு திட்டத்தாலும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உலக அளவில் முன்னிலை வகித்து வருகிறது. வேளாண், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இந்த மையத்தின் தொழில்நுட்பம் பயனளித்து வருகிறது.

இதேபோல் நாட்டின் வளா்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு, பெரிய அளவில் தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் வருங்காலத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்’ என்றாா்.

நிகழாண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தின்போது விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களில் சண்டீகா் பல்கலைக்கழகத்தின் 75 மாணவா்கள் உருவாக்கும் செயற்கைக்கோளும் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com