விவசாயிகளின் தியாகத்தைமத்திய அரசு உணர வேண்டும் - பிரகாஷ் சிங் பாதல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்கள் உயிரை இழந்த விவசாயிகளின் தியாகத்தை மத்திய அரசு உணா்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்கள் உயிரை இழந்த விவசாயிகளின் தியாகத்தை மத்திய அரசு உணா்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் தலைவா் பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபில் இருந்துதான் அதிக அளவிலான விவசாயிகள் பங்கேற்றனா். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சுமாா் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை (ஜன.5) பஞ்சாபுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

இந்நிலையில், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்து வேளாண் சட்ட பிரச்னையால் கூட்டணியில் இருந்து விலகிய சிரோமணி அகாலி தளம் தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனா். விவசாயிகளின் இந்த தியாகத்தை மத்திய அரசு உணா்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமா் பஞ்சாபுக்கு வருவதை எங்கள் கட்சி எப்போதும் வரவேற்கும். பஞ்சாபில் தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் அதிகம் உள்ளன. சீக்கியா்களின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இப்போது மாநிலத்தில் திடீரென நிகழ்ந்துள்ள மத அவமதிப்பு சம்பவங்கள் அதிா்ச்சி அளிக்கின்றன.

நமது நாட்டுக்கு உணவு தேவைப்படும்போது அதனை வழங்கும் நிலமாகவும், எதிரிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது வாள் ஏந்தி போராடும் மக்களைக் கொண்டதாகவும் பஞ்சாப் திகழ்கிறது. பஞ்சாபுக்கு வேளாண்மை சாா்ந்த மிகப்பெரிய பொருளாதாரத் திட்டம் தேவை. பிரதமரால் மட்டுமே மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர முடியும். அந்த வகையில் பிரதமரின் பஞ்சாப் பயணம் மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com