கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் புத்தாண்டு கொண்டாட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் தேசிய கொடியை ஏற்றி புத்தாண்டு கொண்டாடும் படங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.
கிழக்கு லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் தேசிய கொடியை ஏற்றி  ஆங்கிலப் புத்தாண்டு வரவைக் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்.
கிழக்கு லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் தேசிய கொடியை ஏற்றி  ஆங்கிலப் புத்தாண்டு வரவைக் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் தேசிய கொடியை ஏற்றி புத்தாண்டு கொண்டாடும் படங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.
 இந்தப் படங்களை மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கல்வான் பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள ஓரிடத்தில் இருந்து சீன ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறிய விடியோ வெளியான மூன்று நாள்களுக்குப் பிறகு இந்திய வீரர்களின் படங்கள் வெளியாகியுள்ளன.
 அந்தப் படங்களில் ஒன்றில் தேசிய கொடியுடன் சுமார் 30 வீரர்கள் இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. மற்றொரு படத்தில் நான்கு வீரர்கள் ஒரு தேசிய கொடியை ஏந்தியிருக்கும் காட்சியும், அங்குள்ள தற்காலிக சோதனைச் சாவடியில் மூவர்ணக் கொடி பறக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படங்கள் அனைத்தும் கல்வான் பள்ளத்தாக்கில் ஜனவரி 1-ஆம் தேதி எடுக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
 கிழக்கு லடாக்கிலும், வடக்கி சிக்கிமிலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஜனவரி ஒன்றாம் தேதியன்று இந்திய, சீனப் படைகள் பரஸ்பரம் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டன.
 கல்வான் பள்ளத்தாக்கிற்கு அருகே தங்கள் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் தேசியக் கொடியேற்றும் படத்தை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில் சீன ராணுவ வீரர்கள் புத்தாண்டு கொண்டாடும் இடம் கல்வான் பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள சீன நிலப்பரப்புக்கு உட்பட்ட பகுதி என்றும், அது இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கடந்த ஜூன் 15-ஆம் தேதி மோதல் நடைபெற்றஇடத்துக்கு அருகில் உள்ள பகுதி அல்ல என்றும் தெரிவித்தன.
 இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து பாங்காங் ஏரி பகுதியில் வன்முறை மிகுந்த மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் குவித்ததோடு கனரக ஆயுதங்களையும் குவித்தன.
 அதன்பிறகு இரு தரப்பு ராணுவம் மற்றும் தூதரகப் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதியில் இருந்தும் கோக்ரா பகுதியில் இருந்தும் இருதரப்பிலும் படைக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 தற்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் இரு நாட்டு ராணுவங்களும் தலா 50000 முதல் 60,000 படைகளைக் குவித்துள்ளன.
 இதனிடையே, இரு தரப்புக்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 13-ஆவது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தாங்கள் தெரிவித்த ஆக்கபூர்வ ஆலோசனைகளை சீனத் தரப்பு ஏற்காததே இதற்குக் காரணம் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
 அதன் பிறகு நவம்பர் 18-ஆம் தேதி இருதரப்பிலும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை முற்றிலுமாக வாபஸ் பெறுவது பற்றி 14-ஆவது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com