ஓபிசி, இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (இடபிள்யுஎஸ்) இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மீண்டும் விசாரிக்கவுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம், இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வை எழுதிய மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கு காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான வருமான உச்சவரம்பை மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த மத்திய அரசு, அந்த வகுப்பினரை அடையாளம் காண அவா்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாகவே தொடரும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘ஓபிசி, இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு சட்டபூா்வமாக உள்ள உரிமைகள் தடுக்கப்படுவதை மத்திய அரசு ஏற்காது. இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து கடந்த 2019-ஆம் ஆண்டே மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதனைத்தொடா்ந்து பல்வேறு பணி நியமனங்கள், கல்வி சோ்க்கைகளில் அந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இதுதொடா்பாக நீண்ட விவாதங்களை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டுக்குப் புதிய மருத்துவா்கள் தேவைப்படுகின்றனா். மருத்துவப் படிப்புகளில் ஓபிசி, இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பை வெளியிட்ட போது, இதுபோன்ற சூழல் உருவாகும் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கவில்லை’’ என்று தெரிவித்தாா்.

அதனைத்தொடா்ந்து மாணவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சியாம் திவான், அரவிந்த் ஆகியோா் வாதிடுகையில், ‘‘மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு தொடா்பான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி-மாா்ச் மாதங்களில் வெளியிடப்பட்டது. அதன் பின்னா் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓபிசி, இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவேதான் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதேவேளையில் இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண அவா்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக தொடா்வதற்கு எதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து, அதுபற்றி மத்திய அரசு தரப்பில் ஆராய அமைக்கப்பட்ட குழு விளக்கவில்லை.

ரூ.1 லட்சம் முதலீடு செய்பவரும்...: பங்குச்சந்தையில் பங்குகள் மீது ரூ.1 லட்சம் முதலீடு செய்யக்கூடிய நபரும் இடபிள்யுஎஸ் வகுப்புக்குள் வரலாம் என்பதால், அந்த வகுப்பினரை அடையாளம் காண ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளதன் அடிப்படை தன்னிச்சையானது’’ என்று தெரிவித்தனா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை வியாழக்கிழமை மீண்டும் விசாரிக்க முடிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com