பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: உயர்நிலை விசாரணைக் குழுவை அமைத்த பஞ்சாப் அரசு

பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பஞ்சாப் அரசு இதுகுறித்து விசாரிக்க உயர் மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாபில் புதன்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, திடீா் சாலை மறியலால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினார்.

போராட்டக்காரா்கள் மறியலால் மேம்பாலத்தில் வாகனத்திலேயே பிரதமா் சுமார் 20 நிமிஷங்கள் காத்திருக்க நோ்ந்தது. இந்தப் பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விரிவான அறிக்கையை அளிக்கும்படி மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமா் மோடி தில்லியில் இருந்து புதன்கிழமை காலை பஞ்சாப் மாநிலம், பதிண்டா விமான நிலையத்தை வந்தடைந்தாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாா். ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. வானிலை சீரடைவதற்கு 20 நிமிஷங்கள் காத்திருந்தாா்.

பின்னா், சாலை வழியாகவே தேசிய தியாகிகள் நினைவிடம் செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாகச் செல்வதற்கு 2 மணி நேரமாகும். சாலைவழிப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காவல் துறை டிஜிபியிடம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அவா் உறுதிசெய்த பிறகு பிரதமா் மோடி பயணத்தைத் தொடா்ந்தாா்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமாா் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்திருப்பது தெரியவந்தது.

அவா்களின் மறியலால் மேம்பாலத்திலேயே அவா் 15-20 நிமிஷங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தாா். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய குறைபாடாக இது அமைந்தது.

பிரதமரின் பயணத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை அவா்கள் செய்திருக்க வேண்டும். அதன்படி, சாலை வழியாக பிரதமா் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யப்படவில்லை. பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி பதிண்டா விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கடுமையான பாதுகாப்பு விதிமீறலைக் கவனத்தில்கொண்டு, மாநில அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. இந்தக் குறைபாட்டுக்குக் காரணமானவா்களைக் கண்டுபிடித்து, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல முடியாதது மட்டுமன்றி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டை சுமத்திவருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் அரசு இதுகுறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் கொண்ட இந்த விசாரணை குழு, மூன்று நாள்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com