"11 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டேன்"...84 வயது முதியவரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

கரோனா தடுப்பூசி விநியோகம் அமல்படுத்தப்பட்ட விதம், இது எம்மாதிரியான தீவிரமான பின்வுளைவுகளை ஏற்படுத்தக்கூடும் போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரம்மதேவ் மண்டல்
பிரம்மதேவ் மண்டல்

ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி விநியோக பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத சமயத்தில் கூட தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கோவின் செயலியிலிருந்து குறுஞ்செய்தி வருவது தொடர் கதையாகிவருகிறது. இது கரோனா தடுப்பூசி விநியோகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் குறித்து பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், தான் 11 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக பிகாரை சேர்ந்த 84 வயது முதியவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் சௌசாவில் வசித்துவருபவர் பிரம்மதேவ் மண்டல். இவர்தான், 11 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் அதனால் பயன் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "வாழ்க்கையின் அமுதமே தடுப்பூசிதான். இதனால், நான் மிகவும் பயன் பெற்றுள்ளேன். இடுப்பு வலி கூட குணமாகிவிட்டது. தற்போது, என்னிடம் நிறைய ஆக்ஸிஜன் இருக்கிறது. இனி இருமல் அல்லது சளியால் அவதிப்பட வேண்டிய தேவையில்லை.

அரசு மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளைக் கொண்டு வந்துள்ளது. மற்றவர்கள் ஏன் அதிக தடுப்பூசிகளை எடுத்து கொள்வதில்லை என கேட்க விரும்புகிறேன்? மோடி அரசை எதிர்க்கும் கட்சிகளான காங்கிரஸ் போன்ற கட்சிகள் தவறு செய்துவருகின்றன" என்றார்.

உங்களால் எப்படி அதிக முறை தடுப்பூசி எடுத்து கொள்ள முடிந்தது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரே தொலைப்பேசி எண், ஆதார் எண்ணை கொண்டுதான் தடுப்பூசி செலுத்தி கொள்ள பதிவு செய்து கொண்டேன். இதுகுறித்து அரசு கண்காணிக்கவில்லை. இன்னும், அதிக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

12ஆவது முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சௌசாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரம்மதேவ் சமீபத்தில் சென்றுள்ளார். ஆனால், அந்த சமயத்தில் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்ததால், தடுப்பூசி செலுத்தாமல் அவர் திரும்ப நேர்ந்தது. மாநில தபால் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர், எப்போதெல்லாம் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார் போன்ற விவரங்களை வைத்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் மூன்று முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com