மருத்துவ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடங்கும் தேதி அறிவிப்பு

கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் உதவும் வகையில் சேர்க்கை முடிந்த பிறகு, 45,000 ஜூனியர் மருத்துவர்கள் பணியில் சேரவுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை வரும் புதன்கிழமை முதல் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

‘அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10 சதவீத ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லும்’ என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, இந்த வழக்கின் காரணமாகவே நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில், இடைக்கால உத்தரவை தொடர்ந்து, மாணவர் சேர்க்கை வரும் புதன்கிழமை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மன்சுக் மாண்டவியா ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவ மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தின்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல், மருத்துவ கலந்தாய்வு குழுவால் நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை இது பலப்படுத்தும். சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.

நீட் முதுநிலை சேர்க்கையின் அடிப்படையில்தான், 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள், சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஒதுக்கப்படும். மூத்த மருத்துவர்களின் மேற்பார்வையில், சிறப்பு பிரிவை தேர்ந்தெடுத்து அவர்கள் பணியில் ஈடுபடலாம்.

இந்த சேர்க்கையானது, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கவிருந்தது. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், இந்த சேர்க்கை தள்ளிப்போனது. 

இதன் காரணமாக, 45,000 ஜூனியர் மருத்துவர்கள், பணியில் சேர முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com