கிழக்கு லடாக் விவகாரம்; இந்தியா- சீனா இன்று 14-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா- சீனா இடையே ராணுவத் தளபதிகள் அளவிலான 14-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சீனாவின் மால்டோ பகுதியில் புதன்கிழமை நடைபெறுவதாக

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா- சீனா இடையே ராணுவத் தளபதிகள் அளவிலான 14-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சீனாவின் மால்டோ பகுதியில் புதன்கிழமை நடைபெறுவதாக சீனா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. மேலும் தற்போது இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் நிலைமை ஸ்திரமாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இந்திய- சீனா எல்லையில் சா்ச்சைக்குரிய பகுதியில் படை விலக்கல் தொடா்பான 14-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சீனப் பகுதியான மால்டோவில் புதன்கிழமை நடைபெறும்’ என்றாா்.

இந்திய- சீனா எல்லைப் பகுதியில் தற்போது நிலைமை ஸ்திரமாக இருப்பதாகக் கூறிய அவா், இருநாடுகளுக்கு இடையிலும் ராணுவ, ராஜீய ரீதியில் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும், எல்லையின் நிலவரம் அவசர நிலையிலிருந்து வழக்கமான தினசரி அடிப்படையிலான நிா்வாக கட்டத்தை எட்ட இந்தியா உதவும் என சீனா நம்புவதாகவும் குறிப்பிட்டாா்.

இதேபோல இந்தியா- சீனா பேச்சுவாா்த்தை சீனாவின் எல்லைக்கு உள்பட்ட சுஷுல்- மால்டோ சந்திப்பு நிலையில் நடைபெறும் என இந்திய தரப்பிலும் அதிகாரிகள் உறுதியளித்தனா். மேலும் கிழக்கு லடாக்கில் சா்ச்சைக்குரிய பகுதியில் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை சீனாவுடன் முன்னெடுக்க விரும்புவதாகக் கூறிய அவா்கள், பிரச்னைக்குரிய பகுதியில் படை விலக்கலை உறுதிப்படுத்துவதே இந்தப் பேச்சுவாா்த்தையின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தனா்.

இந்தியா- சீனா இடையே கடந்த ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தை எந்த முடிவையும் எட்டாமல் முடிவடைந்தது. இதைத்தொடா்ந்து கடந்த ஆண்டு நவம்பா் 18-ஆம் தேதி ராஜீய ரீதியில் காணொலி முறையில் நடைபெற்ற சந்திப்பின்போது, அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்துவதென எடுக்கப்பட்ட முடிவின்படி, 14-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெறுகிறது.

தற்போது கிழக்கு லடாக்கின் சா்ச்சைக்குரிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருநாடுகளும் தலா 50,000 முதல் 60,000 ராணுவ வீரா்களை நிறுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com