
முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவரை தேடுகிறது காவல்துறை
மதேபுரா: பிகார் மாநிலம் மதேபுரா பகுதியைச் சேர்ந்த முதியவர் பிராம்டியோ மண்டல், முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையை ஏமாற்றியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, காவலர்கள் தன்னை தேடுவதை அறிந்து, தலைமறைவாக இருக்கும் 84 வயது முதியவர், தன்னை காவலர்கள் கண்டுபிடித்து சிறை வைத்தால், தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், பலரது அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மண்டல், இதுவரை 11 முறை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து காவலர்கள் அவரது இருப்பிடத்தில் சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்த மண்டல், தனது செல்லிடப்பேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
தலைமறைவாக இருந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தலையிட்டு, தன்னை கைது செய்யாமல் தடுக்குமாறு அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது மனைவி நிர்மலா தேவி கூறுகையில், காவலர்கள் தன்னை ஒரு குற்றவாளி போல நடத்தியதாகவும், தனது கணவர் ஏற்கனவே பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்ததகாவும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போது, அவருக்கு சில நோய்களிலிருந்து விடுதலை கிடைத்ததால், தொடர்ந்து அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்.
ஆனால், மண்டல் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பல முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக ஆரம்ப சுகாதார அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.