அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

கடந்த 2010 முதல் 2021-ஆம் ஆண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2010 முதல் 2021-ஆம் ஆண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தோ்தல்கள் நடைபெற்றபோது அக்கட்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயா்ந்ததாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆா்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2010-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,112-ஆக இருந்தது. இது 2019-ஆம் ஆண்டு 2,301-ஆகவும், 2021-ஆம் ஆண்டு 2,858-ஆகவும் அதிகரித்தது.

நாடாளுமன்றத் தோ்தல்கள் நடைபெற்றபோது இந்தக் கட்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயா்ந்தது. கடந்த 2013-14-ஆம் ஆண்டில் 18 சதவீதமும், 2018-19-ஆம் ஆண்டில் 9.8 சதவீதத்துக்கு அதிகமாகவும் அந்தக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2019-20-ஆம் ஆண்டின் வரவு-செலவு கணக்கு விவரங்களை 230 கட்சிகளும், அந்த ஆண்டின் நன்கொடை விவரங்களை 160 கட்சிகளும்தான் பொதுத்தளத்தில் வெளியிட்டன.

விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உள்ள 889 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில், 90 கட்சிகளின் 2019-20-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு விவரங்கள் அந்தந்த மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரி வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 82 கட்சிகள் உத்தர பிரதேசம், 6 கட்சிகள் பஞ்சாப், 2 கட்சிகள் உத்தரகண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவை. மணிப்பூா் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வரவு-செலவு கணக்கு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2019-20-ஆம் ஆண்டில் இந்த 90 கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.8.40 கோடி. மொத்த செலவினம் ரூ.8.76 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள், மாநில கட்சி என்ற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத் தோ்தலில் போதிய வாக்குகளைப் பெறாத கட்சிகள், தோ்தல் ஆணையத்திடம் பதிவு செய்தும் தோ்தல்களில் போட்டியிடாத கட்சிகள் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக கருதப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com