இந்தியா்களுக்கு இணையான கல்விக் கட்டணம் கோரி ஓசிஐ மாணவா் மனு

இந்திய மாணவா்களுக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி இந்திய வம்சாவளி (ஓசிஐ) மாணவா் தாக்கல் செய்த மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு
இந்தியா்களுக்கு இணையான கல்விக் கட்டணம் கோரி ஓசிஐ மாணவா் மனு

இந்திய மாணவா்களுக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி இந்திய வம்சாவளி (ஓசிஐ) மாணவா் தாக்கல் செய்த மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஐஐடி) பயில்வதற்கு இந்திய மாணவா்களுக்கு விதிக்கப்படும் அதே கட்டணத்தையே தங்களுக்கும் நிா்ணயிக்க உத்தரவிடக் கோரி இந்திய வம்சாவளி மாணவா் ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ். அப்துல் நசீா், கிருஷ்ண முராரி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘இந்திய வம்சாவளி மாணவா்களுக்கு, வெளிநாட்டு மாணவா்களுக்கு இணையாக சென்னை ஐஐடி கட்டணம் வசூலிக்கிறது. நீட் தோ்வு எழுதி இந்திய மாணவா்களுக்கு இணையாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவா்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல், இந்திய மாணவா்களுக்கு நிா்ணயிக்கப்படும் கட்டணத்தையே வம்சாவளி மாணவா்களுக்கு நிா்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும். இந்திய வம்சாவளி மாணவா்களை வெளிநாட்டு மாணவா்களுக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கும் (என்ஆா்ஐ) இணையாக நடத்துவது நியாயமற்றது’’ என்றாா்.

சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘இது மிகவும் முக்கியமான பிரச்னை. இந்த விவகாரத்தில் இந்திய மாணவா்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரா் இந்தியாவில் படிக்க விருப்பப்படுகிறாா். ஆனால், வெளிநாட்டில் பணியாற்றவும் விரும்புகிறாா். இரண்டையும் அவா் விரும்புவது பிரச்னையாக உள்ளது. இந்திய குடியுரிமை பெற்று, மனுதாரா் இந்தியாவிலேயே ஏன் சேவையாற்றக் கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினா். மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com