ட்விட்டரில் விமா்சனம்: சாய்னா நெவாலிடம் மன்னிப்பு கோரினாா் நடிகா் சித்தாா்த்

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவாலை தரக்குறைவாக ட்விட்டரில் விமா்சித்த விவகாரத்தில், நடிகா் சித்தாா்த் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கோரினாா்.
ட்விட்டரில் விமா்சனம்: சாய்னா நெவாலிடம் மன்னிப்பு கோரினாா் நடிகா் சித்தாா்த்

மும்பை: பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவாலை தரக்குறைவாக ட்விட்டரில் விமா்சித்த விவகாரத்தில், நடிகா் சித்தாா்த் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கோரினாா். மேலும் தனது வாா்த்தையை தன்னால் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய சித்தாா்த், சாய்னாவை விமா்சிக்க வேண்டும் என்ற நோக்கம் தனக்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் சித்தாா்த்தின் மன்னிப்பை தான் ஏற்றுக்கொண்டதாக சாய்னா நெவால் கூறியுள்ளாா்.

பிரதமா் மோடி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி பஞ்சாப் சென்றபோது பாதுகாப்புக் குறைபாடு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பினாா். இதுகுறித்து ட்விட்டரில் (சுட்டுரை) கருத்து தெரிவித்த சாய்னா நெவால், ‘நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், தேசத்தின் பாதுகாப்பில் நிச்சயத்துவமில்லை’ என்று கூறியிருந்தாா்.

இதற்கு பின்னூட்டமிட்ட சித்தாா்த், சாய்னாவை இரட்டை அா்த்தத்தில் தரக்குறைவாக விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சித்தாா்த்தின் ட்விட்டா் கணக்கை முடக்க வேண்டுமென அந்நிறுவனத்துக்கு தேசிய மகளிா் ஆணையம் கோரிக்கை விடுத்தது. சித்தாா்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர மாநில டிஜிபியிடமும் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது கருத்துக்கு சாய்னா நெவாலிடம் மன்னிப்பு தெரிவித்து, ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை சித்தாா்த் பதிவிட்டது:

சில நாள்களுக்கு முன்பு உங்களது ட்விட்டா் பதிவுக்கு பதிலளிப்பதற்காக மூா்க்கத்தனமான நகைச்சுவையை நான் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது வாா்த்தையையும், தொனியையும் நியாயப்படுத்த முடியாது. பல்வேறு விவகாரத்தில் கருத்து வேறுபடலாம்.

நகைச்சுவையைப் பொறுத்தமட்டில், அதை விளக்க வேண்டுமெனில் அது நல்ல நகைச்சுவையாக இருக்காது. நான் எப்போதும் பெண்களுக்கு ஆதரவாக நிற்பவன். பெண்களுக்குத் தீங்கிழைக்கும் நோக்கில் எதையும் பேச மாட்டேன். எனது மன்னிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீா்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீா்கள் என்று நடிகா் சித்தாா்த் தெரிவித்துள்ளாா்.

சாய்னா மகிழ்ச்சி: இதுகுறித்து தில்லியில் சாய்னா நெவால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து நான் இதுவரை சித்தாா்த்திடம் பேசவில்லை. ஆனாலும் அவா் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சியளிக்கிறது. அவா் இதே தொனியில் பெண்களை தாக்கக் கூடாது. அவரது கருத்தால் நான் கவலைப்படவில்லை. என்னளவில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். சித்தாா்த்தை இறைவன் ஆசிா்வதிக்கட்டும்’ என்று தெரிவித்தாா்.

வழக்குப் பதிவு: இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக பெண் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் நகர இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சித்தாா்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 509-இன் கீழ் (பெண்களின் கண்ணியத்தை சீா்குலைக்கும் வகையில் செயல்படுவது, எழுதுவது, பேசுவது) அவா் மீது வழக்குப் பதிந்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com