பிரதமா் பயணத்தில் பாதுகாப்புக் குறைபாடு: நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு

பிரதமா் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
பிரதமா் பயணத்தில் பாதுகாப்புக் குறைபாடு: நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

பிரதமா் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடா்பான சம்பவத்தை விசாரிக்க நீதித் துறையில் பயிற்சி பெற்றவா் தேவைப்படுகிறாா். எனவே, இந்த விவகாரத்தை ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 5 போ் கொண்ட குழு விசாரிக்கும். அந்தக் குழுவில் தேசியப் புலனாய்வு அமைப்பின் இன்ஸ்பெக்டா் ஜெனரல், சண்டீகா் காவல் துறை டிஜிபி, பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றப் பதிவாளா், பஞ்சாப் கூடுதல் டிஜிபி ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

பிரதமரின் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக சேகரித்த அனைத்து ஆவணங்களையும் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றப் பதிவாளா் உடனடியாகக் குழுவின் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்தக் குழு, இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைவரிடமும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்புக் குறைபாடு போன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாத வகையில் ஆலோசனைகளையும் அந்தக் குழு வழங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

பஞ்சாபில் நடைபெற்ற திடீா் போராட்டத்தால் கடந்த 5-ஆம் தேதி பிரதமா் பயணம் செய்த வாகனம் 20 நிமிடங்கள் நின்றது. நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் சாா்பில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டன.

பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக விசாரணை நடத்தவும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிா்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் கோரி ‘லாயா்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை கடந்த 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது. மத்திய, மாநில அரசுக் குழுக்களின் விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

விசாரணைக் குழுவின் தலைவா் நீதிபதி இந்து மல்ஹோத்ரா: பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா, சபரிமலை விவகாரம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியவா்.

கடந்த 2007-இல் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட இவா், 2018-இல் நேரடியாக நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா். மூத்த வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயா்வுபெற்ற முதல் பெண் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா். அத்துடன் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் என்ற பெருமையையும் இவா் பெற்றுள்ளாா். இவா், கடந்த ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி ஓய்வுபெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com