
ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் குறித்த ஆய்வில் கிடைத்த நல்ல தகவல்
நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை எழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் குறித்த ஆய்வில் நல்ல தகவல் கிடைத்துள்ளது.
முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதும் அல்லது முன்னதாகவே கரோனா பாதிப்புக்குள்ளானதும், பல மடங்கு உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தருகிறதோ இல்லையோ, ஆனால், ஒமைக்ரான் பாதித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமானது 4 சதவீதத்துக்கும் கீழ்தான் உள்ளது.
புது தில்லியில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனை சார்பில், நாட்டில் முதல் முறையாக ஒமைக்ரான் பற்றி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் இவ்வாறு சொல்கின்றன.
இதையும் படிக்க.. சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!
மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளில், தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில நாள்களில், அதாவது டிசம்பர் மாதத்திலேயே தில்லியில் ஒமைக்ரான் பரவல் சமூகப் பரவலாக மாறிவிட்டிருந்தது. அதேவேளையில், விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து விமானங்களுக்கு தடை விதித்தது போன்ற நடவடிக்கைகளால் இது கட்டுப்படுத்தப்பட்டது.
தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மருத்துவ மையத்துடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், தில்லியின் ஐந்து மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் 264 மாதிரிகள் மரபணு மாற்ற வரிசைமுறை சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அதில், 82 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் இரண்டாம் அலை உருவாகக் காரணமான டெல்டா வகை வைரஸ் பாதித்திருந்தது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அளவு சிறியதாக இருந்தபோதிலும், நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு கடுமையாக அதிகரித்திருந்ததை உறுதி செய்துள்ளது.
மேலும், நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 82 பேர் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள். அனைவருமே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். இவர்களில் வெறும் மூன்று பேர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்குச் சென்றனர். அவர்கள் மூன்று பேரும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தவர்கள். ஆனால் யாருக்கும் ஐசியுவில் அனுமதிக்கப்படும் தேவை ஏற்படவில்லை.
அதேவேளையில், கரோனா இரண்டாம் அலையின்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவை இருப்போர் விகிதம் 20-23% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.