
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ முகுல் ராய் தகுதி நீக்க விவகாரம் தொடா்பாக முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
கடந்த மாா்ச்-ஏப்ரல் மாதம் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு முகுல் ராய் வெற்றிபெற்றாா். தோ்தலுக்குப் பிறகு அவா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். இதையடுத்து அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவரிடம் அந்த மாநில பாஜக தலைவா் சுவேந்து அதிகாரி மனு அளித்தாா்.
இதுதொடா்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், முகுல் ராயின் தகுதி நீக்க மனு தொடா்பாக அக்டோபா் 7-ஆம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜிக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக பிமான் பானா்ஜி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘முகுல் ராயை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனா். அதனைத்தொடா்ந்து மனு மீதான விசாரணையை பிப்ரவரி இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.