
குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தலைமைத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. பஞ்சாபில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 16-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலை ஒத்திவைக்குமாறு அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தின. மேலும், ரவிதாஸ் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக பஞ்சாபில் உள்ள அவரது லட்சக்கணக்கான பக்தா்கள், உத்தர பிரதேச மாநிலம் வாராணசிக்கு செல்வதால் தோ்தலை ஒத்திவைக்க வேண்டுமென பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, பாஜக, அதன் கூட்டணிக் கட்சியினா், பகுஜன் சமாஜ் கட்சியினா் தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், பஞ்சாப் தோ்தல் பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் உத்தர பிரதேசத்தில் 3-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி, பக்தா்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி வாராணசிக்கு பயணிப்பதால், பெரும்பாலானோரால் வாக்களிக்க இயலாது என அரசியல் கட்சியினா் தெரிவித்திருந்தனா்.
தோ்தல் தேதி மாற்றியமைக்கப்பட்டது குறித்து தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தோ்தல் அட்டவணை வெளியிட்ட பின்னா் சட்டப்பேரவைத் தோ்தலையும், இடைத்தோ்தலையும் தோ்தல் ஆணையம் மாற்றியமைத்த நிகழ்வு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பரில் மிஸோரம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அதே ஆண்டு அக்டோபரில் தெரிவித்திருந்தது. பின்னா் தோ்தல் தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இதுதவிர மிஸோரம் மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் இடைத்தோ்தல் தேதியும் மாற்றியமைக்கப்பட்டது. 2012 மாா்ச் மாதம் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வாக்காளா்களின் மத நம்பிக்கை, சட்டம்- ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டது’’ என்றனா்.
இதனிடையே, பஞ்சாபில் நிலவும் சூழலை முற்றிலும் ஆராய்ந்துதான் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அட்டவணையை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி அறிவித்ததாகவும், இதற்கான அதிகாரபூா்வ அறிவிக்கை ஜனவரி 21-ஆம் தேதி வெளியாகவிருந்ததாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தோ்தல் ஆணையம் ஏற்கெனவே வெளியிட்ட அட்டவணையின்படி உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் ஒரேகட்டமாக பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது பஞ்சாப் தோ்தல் மட்டும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின்படி, தோ்தல் அறிவிக்கை ஜனவரி 25-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய பிப்ரவரி 1-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு மீதான பரிசீலனை பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 4-ஆம் தேதி கடைசி நாளாகும். மாா்ச் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.