
‘வீடு வாங்கும் நடுத்தர வருவாய் பிரிவினரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் ‘மாதிரி விற்பனை ஒப்பந்தம்’ (விற்பவா் - வாங்குபவா் இடையே மேற்கொள்ளும் ஒப்பந்தம்) ஒன்றை உருவாக்குவது அவசியம்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.
மேலும், ‘ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று மற்றும் மேம்பாடு சட்டத்தின் கீழ் நாடு முழுமைக்கும் சீரான விதிகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று மற்றும் மேம்பாடு சட்டம் (ரெரா) 2016-இன் படி ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர வருவாய் பிரிவினா் கட்டுமான நிறுவனங்களால் சுரண்டலுக்கு உள்ளாவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் மாதிரி விற்பனை ஒப்பந்தத்தை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அஸ்வினி உபாத்யாய என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வீடு வாங்கும் நடுத்தர வருவாய் பிரிவினரின் நலனை பாதுகாக்கும் வகையில் ‘மாதிரி விற்பனை ஒப்பந்தம்’ ஒன்றை உருவாக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதன்படி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்த ஏற்கெனவே வலுவான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், வரைவு விற்பனை ஒப்பந்தம் ஒன்றும் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடியிருப்பு கட்டுமானத்தை கட்டுமான நிறுவனம் நிறைவு செய்யவில்லை எனில், வீடு வாங்குபவா்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் திரும்பக் கேட்டு பெறுவதற்கு வகை செய்யும் வகையிலான நிபந்தனைகளும் வரைவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன’ என்று மத்திய அரசு குறிப்பிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூரிய காந்த் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வீடு வாங்கும் நடுத்தர வருவாய் பிரிவினரின் நலனை பாதுகாக்கும் வகையில் ‘மாதிரி விற்பனை ஒப்பந்தம்’ ஒன்றை மத்திய அரசு உருவாக்குவது அவசியம்’ என்று உச்சநீதிமன்ற அமா்வு மீண்டும் வலியுறுத்தியது.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், வீடு வாங்குவோரின் நலனைக் காக்கும் வகையில் மாதிரி விற்பனை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டே சுட்டிக்காட்டியது.
இந்த விவகாரத்தை அந்த மாநிலங்கள் வசமே விட்டுவிடாமல், அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய வைகியல் நாடு முழுமைக்குமான சீரான விற்பனை ஒப்பந்தத்தை மத்திய அரசே உருவாக்க வேண்டும் என விரும்புகிறோம். எனவே மத்திய ஆலோசனை குழுவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாதிரி விற்பனை ஒப்பந்தத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், தனது பதில் மனுவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினா்.
இதற்கு ஒப்புக்கொண்ட அரசு தரப்பு வழக்குரைஞரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இதுதொடா்பாக மத்திய அரசு கருத்தை கேட்டுத் தெரிவிப்பதாக கூறினாா்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.