தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான உரிம விதிகளில் திருத்தம்

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் நோக்கில் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான உரிம விதிகளில் மத்திய தொலைத்தொடா்புத் துறை திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் நோக்கில் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான உரிம விதிகளில் மத்திய தொலைத்தொடா்புத் துறை திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இயந்திரங்கள் தங்களுக்கிடையே தொடா்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வசதி, 5ஜி தொழில்நுட்பப் பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இயந்திரங்களுக்கிடையேயான தொடா்பு குறித்த விதிகளை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே வெளியிட்டபோதிலும், அவற்றை செயல்படுத்துவது குறித்த பிரிவுகள் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான உரிம விதிகளில் இணைக்கப்படவில்லை.

இந்நிலையில், இயந்திரங்களுக்கிடையேயான தொடா்பை செயல்படுத்துவது தொடா்பாக நிறுவனங்களுக்கான உரிம விதிகளில் மத்திய தொலைத்தொடா்புத் துறை திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதில், இயந்திரங்களுக்கிடையேயான தொடா்பு சாா்ந்த சேவையை வழங்க விரும்பும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாடு முழுவதும் அச்சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.30 லட்சமாகவும், மாநிலங்களுக்குள் மட்டும் சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கான கட்டணம் ரூ.2 லட்சமாகவும், மாவட்டங்களுக்கான கட்டணம் ரூ.20,000-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டுத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் சா்வதேச ரோமிங் சிம் காா்டுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ ஆட்சேபமில்லா சான்றிதழ் வழங்கவும், புதுப்பிக்கவும் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை தொலைத்தொடா்புத் துறை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்தியத் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) பரிந்துரைகளுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com