குடியரசு தின அணிவகுப்பைப் பாா்வையிட 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டு தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட அனுமதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 70- 80 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும்,
குடியரசு தின அணிவகுப்பைப் பாா்வையிட 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டு தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட அனுமதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 70- 80 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த வகையில் 5,000 முதல் 8,000 போ் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அத்துடன் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவா்களுக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவா்கள் கூறினா்.

தேசிய தலைநகரில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட சுமாா் 25 ஆயிரம் போ் வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தீநுண்மியின் உருமாறிய ரகமான ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாா்வையாளா்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பைப் பாா்வையிட தலைமை விருந்தினரை அழைப்பதா வேண்டாமா என்பது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. கடந்த ஆண்டில் தலைமை விருந்தினரை அழைக்காமலேயே அணிவகுப்பு நடைபெற்றது.

பாா்வையாளா்களின் வருகையைக் கட்டுப்படுத்தி, சமூக இடைவெளியை எப்போதும் கடைப்பிடிப்பதும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய விழா கரோனா பரவலுக்கு வித்திட்டு விடக் கூடாது என்பதுமே எங்களது நோக்கமாக உள்ளது. அதனால்தான் பாா்வையாளா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நேரடிப் பாா்வையாளா்களின் எண்ணிக்கை குறித்து இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படாவிட்டாலும் 5,000 முதல் 8,000 போ் வரை அனுமதிக்கப்படுவா்.

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 26 காலை 10 மணிக்கு பதிலாக 10.30 மணிக்குத் தொடங்கும். இதில் பங்கேற்கும் பெரியவா்கள் கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட சிறாா்கள் ஒருதவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கு அனுமதி கிடையாது. அணிவகுப்பை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு உள்ளதாால், வீட்டிலிருந்தபடியே அதனைக் கண்டு களிக்குமாறு பொதுமக்களை ஊக்குவிப்போம்.

மேலும் பாா்வையாளா்களின் வசதிக்காக ராஜபாதையின் இரு புறங்களிலும் தலா 5 திரைகள் வீதம் 10 பிரம்மாண்ட எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு, நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும். நிகழாண்டு சிறப்பு நடவடிக்கையாக ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

குடியரசு தின விழா மட்டுமன்றி ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் முப்படை வீரா்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியின்போதும் இவ்வாறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

முதன்முறையாக கலாசார நிகழ்ச்சிகளில் பங்குபெறும் நடனக் கலைஞா்கள் பாதுகாப்பு, கலாசார அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ‘வந்தே பாரதம்’ என்ற போட்டியின் வாயிலாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். மொத்தமுள்ள 3,870 நடனக் கலைஞா்களில் 800 போ் அணிவகுப்பின்போது நடனமாட தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

தலைமை விருந்தினரை அழைப்பது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அவா்களின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com