உத்தரப் பிரதேசத்திற்கு வியூகம் தயார்; காங்கிரஸை கரை சேர்ப்பாரா பிரியங்கா? 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவிகித தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என பிரியங்கா காந்தி உறுதி அளித்திருந்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி சிறை சென்ற நடிகை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், அழகி போட்டியின் வெற்றியாளர். ஒரு காலத்தில், அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் இவர்கள். கடும் போட்டி நிலவும் உத்தரப் பிரதேச தேர்தலில் மீண்டெழுவதற்கு பெண்களை முன்னிலைப்படுத்தி வருகிறது காங்கிரஸ்.

பிரியங்கா காந்தி வகுத்த வியூகத்தின்படி, புதிய பிரசாரத்தில் ஒரு அங்கமாக பல பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது காங்கிரஸ். உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, "நான் ஒரு பெண். என்னால் போட்டியிட முடியும்" என்ற கவர்ச்சிமிக்க கோஷத்தை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் எழுப்பிவருகிறது.

403 இடங்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், 40 சதவிகித தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என பிரியங்கா காந்தி உறுதி அளித்திருந்தார். ஏழு கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியிலில் அந்த உறுதிமொழியை பிரியங்கா நிறைவேற்றியுள்ளார்.

கடந்த வாரம், இதுகுறித்து பிரியங்கா காந்தி வெளியிட்ட விடியோ பதிவில், "கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அதிகாரத்தை கைப்பற்றி உங்களின் உரிமைக்காக நீங்கள் போராட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். புது விதமான அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் பேசியிருந்தார்.

சக்தி வாய்ந்த பெண் தலைவர்கள், இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. பிரயங்கா காந்தியின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்தியா காந்தி, பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார். அதேபோல், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த அளவில் அரசியலில் அதிகாரம் செலுத்தினார். 

பெண்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் முயற்சித்தபோதிலும், சட்டம் இயற்றும் இடத்தில் அவர்களுக்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. பெண் மக்களவை உறுப்பினர்கள் சதவிகிதத்தில், 193 நாடுகள் கொண்ட பட்டியிலில் இந்தியா 147ஆவது இடத்தையே பிடித்துள்ளது.

கடந்த 2017 உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்த போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் 10 சதவகிதத்திற்கும் குறைவானவர்களே பெண்களாக இருந்தனர். அசோகா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலின்படி, 403 எம்எல்ஏக்களில் 39 பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மக்களின் மனநிலையை எப்படி உள்ளது என்பதை உத்தரப் பிரதேசம் வெளிப்படுத்தும் என கருதப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்து காங்கிரஸ் மீதான மக்களின் ஈர்ப்பு குறைந்துவருகிறது. 2017 உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் ஏழு இடங்களில் மற்றுமே வெற்றிபெற்றது.


பல்வேறு பின்புலத்திலிருந்து வந்த பெண்களை வேட்பாளர்களாக காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி சிறை சென்ற நடிகை சதாப் ஜாபரை, செய்தித் தொடர்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது. கரோனா முன்கள பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டி போராட்டம் நடத்திய பூனம் பாண்டேவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 

தேர்தலில் வெற்றிபெற்றால், ஏழைகளுக்காக உழைப்பேன் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உறுதி அளித்துள்ளார். இவரின் மகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்த முன்னாள் எம்எல்ஏ தற்போது சிறையில் உள்ளார். 

இப்படி, பார்த்து பார்த்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார் பிரியங்கா காந்தி. கடந்த 20 ஆண்டுகளாக, தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலை விதியை பிரியங்கா மாற்றி எழுதுவாரா என கேள்வி எழுந்துள்ளது. ஆளும் பாஜகவும், பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாதியும், காங்கிரஸை சவாலாக பார்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com