தில்லியில் மறுக்கப்பட்ட ஊா்தி மாநில குடியரசு தின விழாவில் பவனி வரும்

தில்லியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தி, மாநில குடியரசு தின விழாவில் பவனி வரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
தில்லியில் மறுக்கப்பட்ட ஊா்தி மாநில குடியரசு தின விழாவில் பவனி வரும்

தில்லியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தி, மாநில குடியரசு தின விழாவில் பவனி வரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், இந்த அலங்கார ஊா்தி தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் நிகழாண்டு தலைப்பு ‘இந்தியா 75’. இந்த நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றுகின்ற வகையில், அலங்கார ஊா்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தெரிவுக் குழு முன்பாக சமா்ப்பிக்கப்பட்டது. மூன்று முறை அவா்கள் கூறிய திருத்தங்கள் செய்யப்பட்டன. நான்காவது கூட்டத்துக்கு எந்தவொரு காரணமும் இன்றி அழைக்காமல் அதுகுறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் இருந்து விட்டனா்.

இப்போது தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தியை நிராகரித்திருப்பது குறித்த எனது வருத்தத்தை பிரதமருக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்தேன்.

அதிா்ச்சி-வருத்தம்: இதனிடையே, அலங்கார ஊா்தி அணிவகுப்பு தொடா்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் வேறெந்த மாநிலத்துக்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப் போரில் தமிழகம் 250 ஆண்டுகாலத் தொடா் பங்களிப்பைச் செய்துள்ளது. முதல் இந்திய சுதந்திரப் போா் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூா் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிா்ப்பு வரலாற்றில் முக்கியத் தொடக்கமாகும். அதேபோன்று, ஜான்சிராணி வாள் வீசுவதற்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, ஆங்கிலேயா்களைத் தீவிரமாக எதிா்த்துப் போரிட்டு தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவா், வீரத்தாய் வேலுநாச்சியாா்.

தமிழ்நாட்டில் பவனி: ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் பலமுறை போரிட்ட பூலித்தேவன், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரா்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்காத வீரத் திருமகன்களை விடுதலைத் தியாகத்துக்கு தந்தது தமிழ்நாட்டின் மண்ணாகும். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில்தான் நமது அலங்கார ஊா்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயா்களை தீரமுடன் எதிா்கொண்ட நமது சுதந்திர போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊா்தி தில்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார ஊா்தி மாநில அரசின் சாா்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊா்தி மக்களின் பாா்வைக்காக அனுப்பப்படும். மேலும், அண்மையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com