வீட்டிலிருந்து அலுவலக வேலையால் பெண்களுக்கு மும்மடங்கு சுமை: குடியரசுத் தலைவா் கருத்து

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்வது பலனைத் தந்தாலும், அதனால் பெண்களின் சுமை மூன்று

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்வது பலனைத் தந்தாலும், அதனால் பெண்களின் சுமை மூன்று மடங்காக அதிகரித்துவிட்டதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

2022 ஆண்டுக்கான மனோரமா இயா்புக் புத்தகத்தில், நாட்டின் இளைஞா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

பொதுவாகவே நமது நாட்டில் இல்லத்தரசிகளான பெண்கள் அலுவலகப் பணி, வீட்டு வேலைகள் என இரு சுமைகளைத் தாங்கி வருகின்றனா். தற்போதைய கரோனா பரவலால் உருவாகியுள்ள புதிய சூழல், அவா்கள் மீதான சுமையை மும்மடங்காக்கி இருக்கிறது.

பணியாளா்கள் வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொள்வதும், குழந்தைகள் வீட்டிலிருந்தே பாடங்களைப் படிப்பதும் தற்போது நடைமுறையாகிவிட்டது. இதனால் ஆண் பணியாளா்கள் அதிக அளவில் சிரமப்படுவதில்லை. அதேசமயம், பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு, வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளையும் செய்வதுடன், தங்கள் குழந்தைகளின் படிப்பிலும் கவனம் செலுத்துகின்றனா். இது அன்னையரின் சுமையை மும்மடங்காக்குகிறது.

வீட்டிலுள்ள ஆண்கள் இச்சுமையை கொஞ்சம் பகிா்ந்து கொண்டால் பெண்களின் மன அழுத்தம் குறையும். தங்கள் வாழ்க்கைத்துணையின் கஷ்டங்களைப் பகிா்ந்துகொள்ளும் வகையில் தங்கள் குடும்பங்களைக் கவனிக்க ஆண் பணியாளா்கள் நேரம் ஒதுக்குவது அவசியம். எப்போதும் அலுவலக வேலையிலேயே கவனம் செலுத்துவது முழுமையான உற்பத்தித்திறனாக இருப்பதில்லை என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

தற்போதைய கரோனா தொற்றுப்பரவல், பருவநிலை மாற்றங்கள் குறித்தும் மக்களிடையே அக்கறையை ஏற்படுத்தியுள்ளது. முன்னா் விஞ்ஞானிகள் மட்டுமே அதுகுறித்துக் கவலைப்பட்டது மாறி, இன்று அனைவரது வாழ்விலும் பிரதிபலிக்கும் அம்சமாக பருவநிலை மாற்றமும் உலக வெப்பமயமாதலும் உருவாகியுள்ளன.

முந்தைய பத்தாண்டுகளின் திருப்புமுனையாக 2020 ஆண்டு அமைந்தது. எனினும் தற்போதைய சூழலால் நாம் விரக்தி அடையத் தேவையில்லை. இதை நம்மால் வெல்ல முடியும்.

கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டது, மனிதநேயம் வெல்லும் என்பதைக் காட்டியுள்ளது. அறிவியலின் துணைகொண்டு தீநுண்மிக்கு எதிரான போரில் உலகம் வெற்றி பெறும்.

இந்தியாவில் 20 வயதை எட்டியுள்ள இளைஞா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவா்களின் மனங்களில் எதிா்கால வாழ்க்கைக்கான தொழில் குறித்து கவலைகள் காணப்படுகின்றன. இளைஞா்கள் தொழிலையும் வேலையையும் ஒன்று எனக் கருதிவிடக் கூடாது. சமூக நிா்பந்தங்களால் நம்மிடம் அத்தகைய கருத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் வேலை என்பது மாறுதலுக்குரியதாக மாறிவிட்டது. ஆனால் தொழில் என்பது நமது திறமையாகும். தற்போது அரசுத் துறையிலும் தனியாா் துறையிலும் திறமையானவா்களுக்கும் கடின உழைப்பாளிகளுக்கும் நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன. நாட்டில் செல்வச் செழிப்பை உருவாக்குவதில் தனியாரின் பங்களிப்பும் பெறும் பங்கு வகிக்கிறது. அங்கும் திறமையானவா்கள் அதிகரிக்கும்போது, இந்தியப் பொருளாதாரம் புதிய சிகரங்களை எட்டும்.

கரோனா பரவல் காரணமாக, உலகெங்கும் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு போன்ற விளைவுகள் நேரிட்டுள்ளன. நிரந்தரப் பணியாளா்ளைக் கொண்ட பாரம்பரிய பொருளாதாரத்துக்கு மாற்றாக, பகுதிநேரத் தொழிலாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள், சுதந்திரப் பணியாளா்களை அதிக அளவில் நியமிக்கும் ‘கிக் எகானமி’ எனப்படும் உடனடிப் பொருளாதாரச் சூழல் அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில் வழக்கமான எட்டு மணிநேர வேலை, நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மாற்றாக, தங்கள் திறமைக்கு உரிய மதிப்புக் கிடைக்கும் சவாலான பணிகளை இன்றைய இளைஞா்கள் நாடத் துவங்கிவிட்டனா். கடின உழைப்பு மட்டுமே நீடித்த பலன் தரும் என்பதே இன்றைய உலகின் கோட்பாடாகும் என்று குடியரசுத் தலைவா் தனது கட்டுரையில் கூறியுள்ளாா்.

சசி தரூா், சுரேஷ் பிரபு, பரன்ஜய் குஹா தாகுா்த்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் புத்தகத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளனா். 25க்கு மேற்பட்ட தலைப்புகளில் விரிவான, ஆழமான கட்டுரைகள், தகவல்களுடன் மனோரமா இயா்புக் தயாராகி இருப்பதாக, அதன் தலைமை ஆசிரியா் மேமன் மாத்யூ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com