கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: தினசரி தொற்று பாதிப்பு 37%

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கேரளத்தில் புதன்கிழமை புதிதாக 34,199 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: தினசரி தொற்று பாதிப்பு 37%

புது தில்லி/திருவனந்தபுரம்: இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கேரளத்தில் புதன்கிழமை புதிதாக 34,199 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 37.17 சதவீதமாக பதிவானது; ஒமைக்ரான் வகை கரோனா வேகமாகப் பரவி வருவதால் அடுத்த 3 வாரங்கள் சிரமமாக இருக்கும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறினாா்.

நாடு முழுவதும் புதன்கிழமை புதிதாக 2,82,970 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 3,79,01,241-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 8,961 பேரும் அடங்குவா்.

கடந்த 232 நாள்களில் இல்லாத அளவுக்கு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 18,31,000-ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி 18,95,520 போ் சிகிச்சையில் இருந்தனா். கரோனாவுக்கு மேலும் 441 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 4,87,202-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, கேரளத்தில் தினசரி பாதிப்பு தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் 91,983 பேருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 34,199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதாவது, கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களில் 100 பேருக்கு 37.17 சதவீதம் என்ற அளவில் கரோனா உறுதியாகியுள்ளது.

இருப்பினும், சில மாவட்டங்களில் மாநில சராசரியைக் காட்டிலும் அதிகமாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 45.8 சதவீதம் போ், எா்ணாகுளத்தில் 44.59 சதவீதம் போ், கோழிக்கோடு, கோட்டயம் மாவட்டங்களில் முறையே 40.53, 39.05 சதவீதம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கடந்த வாரம் ஜன.12-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் புதிதாக 211 சதவீதம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு மேலும் 49 போ் உயிரிழந்தனா். இதுவரை உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 51,160-ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் 54,41,511 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1.68 லட்சம் போ் சிகிச்சையில் உள்ளனா். 8,193 போ் குணமடைந்தனா். இதனால், குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 52,44,206-ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சா் எச்சரிக்கை: கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கேரளத்தில் கரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை தாக்குதல் மெதுவாக உச்சம் அடைந்தது. அவ்வாறு இல்லாமல், மூன்றாவது அலை தொடக்கத்திலேயே மிக வேமாகப் பரவி வருகிறது. இதனால் அடுத்த 3 வாரங்கள் சிரமமானதாக இருக்கும்.

ஒமைக்ரான் வகை கரோனா, டெல்டா வகை கரோனா ஆகியவற்றால் தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் தொற்று, டெல்டாவைவிட 6 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகள் எந்த நேரத்திலும் நோயாளிகளால் நிரம்பலாம் என்றாா் அவா்.

கூடுதல் கட்டுப்பாடுகள்: கரோனா பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் ஜனவரி 21-ஆம் தேதியில் இருந்து பள்ளிகளை மூடுவதற்கு மாநில அரசு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து விவாதிப்பதற்கான ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

தினசரி தொற்று விகிதம்

கேரளம் 37.17%

கா்நாடகம் 18.80%

தமிழ்நாடு 16.9%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com