உயில் இல்லாத பட்சத்தில் தந்தையின் சொத்துகளை பெற மகள்களுக்கு உரிமையுண்டு: உச்ச நீதிமன்றம்

இந்து வாரிசு சட்டத்தின்படி இந்து பெண்கள் மற்றும் கைம்பெண்களின் சொத்துரிமை குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்து மதத்தைச் சேர்ந்த ஆண், உயில் எதுவும் எழுதிவைக்காத பட்சத்தில், அவர் தனியாக சேர்த்துவைத்த சொத்துக்களையும் இதர பிற சொத்துக்களையும் பெற அவரின் மகளுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து வாரிசு சட்டத்தின்படி இந்து பெண்கள் மற்றும் கைம்பெண்களின் சொத்துரிமை குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தந்தைக்கு சட்டப்பூர்வமான வாரிசு இல்லாத பட்சத்தில் அவர் தனியாக சேர்த்து வைத்த சொத்துகளை பெற மகளுக்கு உரிமை உண்டா?, சட்டம் என்ன சொல்கிறது போன்ற கேள்விகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வு பதில் அளித்துள்ளது..

இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில்,"இறக்கும் நிலையில் இருக்கும் ஒரு ஆண் இந்துவின் சொத்து (உயில் இல்லாமல்) சுயமாகச் சம்பாதித்த சொத்தாகவோ அல்லது ஒரு காப்பாளர் அல்லது குடும்பச் சொத்தைப் பிரித்து வாங்கியதாகவோ இருந்தால், இறந்தவரின் சகோதரரின் மகன்/மகளை காட்டிலும் அதை பெறுதவற்கு அவரின் இந்து மகளுக்கே உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளது.

நீதிபதி முராரி எழுதிய 51 பக்க தீர்ப்பில், "ஆண் இந்துவின் சொத்து - சுயமாகச் சம்பாதித்த சொத்தாகவோ அல்லது குடும்பச் சொத்தைப் பிரித்து வாங்கியதாகவோ இருந்தால் - அதை கைம்பெண் அல்லது மகள் பெறுவதற்கான உரிமையை பழைய இந்து சடடம் மட்டும் இன்றி பல நீதிமன்ற தீர்ப்புகள் நிலைநாட்டியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டு எழுதப்பட்ட தீர்ப்பில், "இந்திய வாரிசு சட்டம் பிரிவு 14 (I), பெண்களுக்குச் சொந்தமான அனைத்து வரையறுக்கப்பட்ட சொத்துகளையும் முழுமையான சொத்துகளாக மாற்றுகிறது. உயில் இல்லாத பட்சத்தில், இப்படிப்பட்ட சொத்துகள் யாவும், யாருக்கு செல்ல வேண்டும் என்பதை இந்திய வாரிசு சட்டம் பிரிவு 15 விளக்குகிறது.

உயில் எதுவும் எழுதி வைக்காமல் ஒரு பெண் இந்து மரணம் அடைந்தால், அவரது தந்தை அல்லது தாயிடமிருந்து பெற்ற சொத்து அவரது தந்தையின் வாரிசுகளுக்குச் செல்லும், அதே சமயம் அவருடைய கணவன் அல்லது மாமனாரால் பெற்ற சொத்து அவரது கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்" என விளக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com